அனைத்துலக பொது மன்னிப்புக் கழகம்: போராளிகளை ‘அச்சுறுத்துவதை’ நிறுத்திக் கொள்ளுங்கள்

அரசாங்கம் ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள மனித உரிமைப் போராட்ட அமைப்பு ஒன்றை ‘அச்சுறுத்துவதை’ நிறுத்திக் கொள்ளுமாறு அனைத்துலக பொது மன்னிப்புக் கழகம் மலேசியாவை கேட்டுக் கொண்டுள்ளது.

போலீஸ் முரட்டுத்தனம் மற்றும் இதர அத்துமீறல்களுக்கு எதிராக போராடி வரும் சுவாராமுக்கு கிடைக்கும் நிதி உதவிகள் பற்றிய ஆய்வை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

பிரான்ஸிடமிருந்து இரண்டு நீர்மூழ்கிகள் கொள்முதல் செய்யப்பட்ட 2002 பேரத்தின் தொடர்பில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மீதும் மற்றவர்கள் மீதும் குற்றம் சாட்டி சுவாராம் புகார் செய்ததைத் தொடர்ந்து பிரஞ்சு நீதிமன்றம் ஒன்று இந்த ஆண்டு தொடக்கத்தில் விசாரணையை தொடங்கியுள்ளது.

சுவாராமுக்கு எதிரான அண்மைய விசாரணை “ஒருமுகப்பட்டுத்தப்பட்ட பல அரசுத் துறைகள் சம்பந்தப்பட்ட அரசாங்க நடவடிக்கையாக” தெரிகிறது எனக் குறிப்பிட்ட அனைத்துலக பொது மன்னிப்புக் கழகம், “எல்லா வகையான மிரட்டலையும் அச்சுறுத்தலையும் முடிவுக்குக் கொண்டு வருமாறு” மலேசியாவைக் கடந்த வெள்ளிக் கிழமை விடுத்த அறிக்கையில் கேட்டுக் கொண்டது.

“சுவாராமுக்கு எதிரான அண்மைய அரசாங்க நடவடிக்கைகள், அந்த நிறுவனத்தின் சட்டப்பூர்வ நடவடிக்கையுடன் குறிப்பாக பிரஞ்சு நீதிமன்றங்கள் முன்பு கொண்டு வரப்பட்டுள்ள ஊழல் வழக்குடன் பிணைந்துள்ளதாகத் தெரிகிறது,” என லண்டனைத் தளமாகக் கொண்ட அந்த அமைப்பு கூறியது.

சுவாராம் ‘குறி வைக்கப்படவில்லை’

சுவாராம் குறி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதை அரசாங்கப் பேச்சாளர் மறுத்துள்ளார்.

“மலேசியாவில் சுயேச்சையான சிவில் சமூக அமைப்புக்கள் இயங்குகின்றன. என்றாலும் மலேசியாவில் எல்லா அமைப்புக்களும் நமது சட்டங்களையும் விதிகளையும் பின்பற்ற வேண்டும். சுவாராம் அதற்கு விலக்கல்ல,” என அந்த அதிகாரி ஏஎப்பி செய்தி நிறுவனத்துக்கு மின் அஞ்சல் வழி அளித்த பதிலில் கூறினார்.

நஜிப் தற்காப்பு அமைச்சராக இருந்த போது இரண்டு ஸ்கார்ப்பின் நீர்மூழ்கிகள் வாங்கப்பட்டது தொடர்பில் ஊழல் நிகழ்ந்துள்ளதாக தான் குற்றம் சாட்டிய பின்னர் குறை கூறுகின்றவர்களை ஒடுக்குவதற்கு அரசாங்கம் உறுதி பூண்டுள்ளதற்கு அந்த விசாரணை ஒர் உதாரணம் என சுவாராம் கூறியுள்ளது.

அந்தக் குற்றச்சாட்டுக்கள் அடுத்த ஆண்டு மத்திக்குள் தேர்தலை எதிர்நோக்க வேண்டியிருக்கும் நஜிப்புக்கு பெரிய தலைவலியாக உள்ளது. கடுமையான பாதுகாப்புச் சட்டங்களைத் திருத்துவது, ரத்துச் செய்வது உட்பட சீர்திருத்த நடவடிக்கைகள் வழி ஆதரவை அதிகரிக்க அவர் முயன்று வருகிறார்.

2008 தேர்தலில் பிஎன் -னைக் கைவிட்ட வாக்காளர்களை கவருவதற்கு நஜிப் மேற்கொள்ளும் தந்திரமே அவை என பிஎன் எதிர்ப்பாளர்கள் கூறியுள்ளனர். அந்தத் தேர்தலில் நஜிப்பின் பிஎன் கூட்டணிக்கு மோசமான பின்னடைவுகள் ஏற்பட்டன. அது நாடாளுமன்றத்தில் தனது பாரம்பரிய மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையையும் இழந்தது.

-AFP