பொதுமக்கள் பார்வையில் மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமைக் காட்டிலும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கே சிறந்த தலைவராகக் காட்சியளிக்கிறார்.
நஜிப்பின் தோற்றத்தைத் தூக்கி நிறுத்த மைய நீரோட்ட ஊடகங்கள் செம்மையாகப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டிருப்பது இதற்கு முக்கிய காரணம் என்று நினைக்கிறார் மெர்டேகா மையத்தின் கருத்துக்கணிப்பாளர் இப்ராகிம் சுபியான்.
கடந்த டிசம்பரில் பிரதமருக்கு மக்களிடமிருந்த அங்கீகார விகிதம் 69 விழுக்காடாக இருந்தது என்றாரவர்.
“சிறப்பாக பணி செய்யக்கூடியவர் யார் என்று பொதுமக்களிடம் கேட்டால் அவர்கள் பெரும்பாலும் நஜிப்பைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். நஜிப், நிறைய பணி செய்வதாக செய்திகள் வருவதைப் பார்க்கிறோம். அவை பெரும்பாலும் நம்பிக்கையூட்டும் செய்திகளாகவும் இருக்கின்றன.
“அதனால், அவர்கள் அன்வாரைக் காட்டிலும் நஜிப்மீது அதிகம் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள். மைய நீரோட்ட ஊடகங்களில், அன்வார்மீது ஒரு வழக்குப் போனால் இன்னொரு வழக்கு என்று வழக்கு பற்றிய செய்திகளைத்தான் பார்க்க முடிகிறது. அவர் அதைச் செய்தார் இதைச் செய்தார் என்று யாராவது ஒருவர் அவர்மீது ஒவ்வொரு நாளும் குற்றம் சுமத்திக்கொண்டிருக்கிறார்”.
இணையத்தளத்தில்-ஃபேஸ்புக்கில் நஜிப்-எதிர்ப்புப் பக்கம்போல்- அரசாங்கத்துக்கு எதிர்ப்பு இருந்தாலும் மக்களில் பெரும்பாலோர் இணையத்தளம் சென்று மாற்று மூலங்களிலிருந்து தகவல் பெறும் வசதியற்றவர்கள் என்று சுபியான் விளக்கினார்.
“பொதுமக்கள் அன்வார் பற்றி முடிவெடுக்க அவரைப் பற்றிய தகவல்கள் அவர்களுக்குப் போதுமான அளவில் கிடைப்பதில்லை.பொதுமக்களில் 40 விழுக்காட்டினர்தான் இணைய வசதி பெற்றிருக்கிறார்கள். அதிலும் மாற்றுச் செய்திகளை வாசிப்போர் எண்ணிக்கை இன்னும் குறைவாக இருக்கும்.
“இணையத்துக்குச் செல்லும் அனைவருமே செய்தித்தளங்களுக்குச் செல்வதில்லை. எனவேதான் தலைவர்களைப் பற்றிய பொதுமக்களின் கணிப்பில் ஒரு சமநிலை நிலவுவதில்லை.”
ஆனால், இந்த அங்கீகார விகிதமெல்லாம் அப்படியே வாக்குகளாக மாறும் என்றும் சொல்லிவிட முடியாது என்று சுபியான் கூறினார்.
“அது, மூன்றில் இரண்டு பகுதியினர் பிரதமர் சொல்வதையும் செய்வதையும் ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதைத் காட்டுகிறது என்பது உண்மைதான்.
“அதற்காக அவர்கள் அத்தனை பேரும் அவருக்குத்தான் வாக்களிப்பார்கள் என்பதில்லை”என்றார். அதனால் ஏற்றுக்கொள்வோரின் எண்ணிக்கையைவிட குறைந்த எண்ணிக்கையில் அவருக்கு வாக்குகள் கிடைக்கக்கூடும்.
தலைவர்களுக்கான ஆதரவைச் சரியாக கணிப்பதற்குச் சமூகக் கலாச்சாரமும் தடையாக அமைந்து விடுவதை சுபியான் சுட்டிக்காட்டினார்.
“…கருத்துக்கணிப்பு செய்யும்போது சமூகத்தில் விரும்பத்தகாத ஒன்றை- எடுத்துக்காட்டுக்கு ஒரு தலைவர் பற்றித் தப்பாக எதையும்-வெளியில் சொல்ல விரும்பமாட்டார்கள். இதனால் ஆட்சியில் இருப்போருக்கு ஆதரவு அளவுக்கதிகமாக இருப்பதுபோல் தெரிவது வழக்கமாகி விடுகிறது.
“அங்கு மாற்றணி தலைவர்களுக்கு ஆதரவு எப்போதும் குறைவாகவே இருக்கும். அதற்குப் பல காரணங்கள். அவர்களை பற்றி அறியாமலிருத்தல்,நேர்மையாக பதில் சொல்ல பயம் போன்றவை.
“தேர்தல் நெருங்கிவர, நெருங்கிவர இந்நிலையில் மாற்றம் ஏற்படும். மாற்றணிக்குப் பாதகமாகவுள்ளவை குறைந்துகொண்டே வரும்.
“அப்போது பார்த்தால் நிலைமை ஓரளவே நஜிப்புக்குச் சாதகமாக இருக்கும்” என்றார்.