நாட்டின் சட்டத்துறை தலைவர் (ஏஜி) அப்துல் கனி பட்டேய்லுக்கு எதிராக கூறப்படும் ஊழல் மற்றும் நீதி சம்பந்தப்பட்ட அத்துமீறல்கள் போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளை விசாரிக்க அரச ஆணையம் அமைக்க வேண்டும் என்று பாஸ் கோருகிறது.
“அரசமைப்புச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஏஜியின் அலுவலகத்திற்கு இது ஒரு கரும்புள்ளியாகும்”, என்று பாஸ் கட்சியின் உதவித் தலைவர் மாபுஸ் ஒமார் இன்று கோலாலம்பூரில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
இக்குற்றச்சாட்டுகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையக்குழுவின் (எம்எசிசி) முன்னாள் உறுப்பினர் ரோபர்ட் பாங், தானாகவே நாடுகடந்து வாழும் வலைப்பதிவர் ராஜா பெட்ரா கமாருடின் ஆகியோருடன் கோலாலம்பூர் முன்னாள் சிஐடி தலைவர் மாட் ஸைன் இப்ராகிம் கூட திறந்த மடல்கள் மூலம் கூறியுள்ளார் என்று மாபுஸ் கூறினார்.
இவ்விவகாரத்தை விசாரிப்பதற்கு ஓர் அரச ஆணையம் இன்றியமையாததாகும் ஏனென்றால் கனி பட்டேய்ல் தலைமையில் இயங்கும் அந்த அமைப்பு அரசமைப்புச் சட்டத்துடன் நேரடியான இணைப்புக் கொண்டுள்ளது. அவர் பேரரசரால் நியமிக்கப்பட்டவர் என்று மாபுஸ் மேலும் கூறினார்.
எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் சம்பந்தப்பட்ட வழக்கில் பொய் சாட்சியம் உருவாக்கியது, ஷஹிடான் ஷாப்பிக்கு எதிரான ஊழல் வழக்கு மற்றும் அல்தான்துயா கொலை வழக்கில் நீதி சம்பந்தப்பட்ட அத்துமீறல் ஆகியவை கனி பட்டேய்லுக்கு எதிராக கூறப்பட்ட குற்றச்சாட்டுகளாகும் என்று மாபுஸ் மேலும் விளக்கம் அளித்தார்.
தமக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்தியவர்கள் மீது அவர் வழக்கு தொடுப்பதற்கான அறிகுறிகள் ஏதும் காணப்படவில்லை என்று மாபுஸ் சுட்டிக் காட்டினார்.
வழக்கு தொடுப்பதில் அவருக்கு பிரச்னை ஏதும் இருக்காது. ராஜா பெட்ரா வெளிநாட்டில் இருக்கிறார். ஆனால் மாட் ஸைன் நாட்டில்தான் இருக்கிறார் என்றார் மாபுஸ்.