‘டாக்டர் மகாதீருக்கும் லினாஸுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை

பாகாங்கில் அமைக்கப்படும் அரிய மண் தொழில் கூடத்தில் தமது மூத்த புதல்வர் மொஹ்ஸானிக்கு ஈடுபாடு இருப்பதால் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் அதனை ஆதரிக்கிறார் எனக் கூறப்படுவதை லினாஸ் நிறுவனம் நிராகரித்துள்ளது.

மொஹ்ஸானி தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் கெஞ்சானா பெட்ரோலியம் குழுமத்தின் மொத்த வரவு செலவில் மிகச் சிறிய பகுதியையே மொத்த குத்தகை மதிப்பான 9.1 மில்லியன் ரிங்கிட் பிரதிநிதிக்கிறது என லினாஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அண்ட்ரூ ஆர்னால்ட் இன்று ஒர் அறிக்கையில் கூறினார்.

“கெஞ்சானா பெட்ரோலியம் பெர்ஹாட்டுடன் செய்து கொள்ளப்ப்பட்டுள்ள மிகவும் சிறிய குத்தகை பற்றி மகாதீருக்கு தெரியும் எனக் கூறுவது கூட மிகவும் பொருத்தமற்றது.”

லினாஸின் பொறியியல், கொள்முதல், கட்டுமான குத்தகையாளர் நிர்வாகம் செய்த திறந்த டெண்டர் முறையில் கெஞ்சானா பெட்ரோலியம் பெர்ஹாட்டின் துணை நிறுவனமான கெஞ்சானா டொர்ஸ்கோ சென் பெர்ஹாட் பெற்றது.

சுற்றுச் சூழல் போராட்ட அமைப்பான மலேசியாவைக் காப்பாற்றுங்கள் லினாஸை நிறுத்துங்கள் (Save Malaysia Stop Lynas) கடந்த வியாழக்கிழமை அந்தத் தகவலை வெளியிட்டது.

செய்தி இணையத் தளமான பிரி மலேசியா டுடே-யில் இன்று வெளியான அந்தத் தகவல் மீது அந்த அமைப்பு, மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் லினாஸ் கோரியது.

அரிய மண் தொழில் கூடம் “ஆபத்தானது” எனக் குறிப்பிடப்படுவது பற்றியும் லினாஸ் அதிருப்தி தெரிவித்துள்ளது. அவ்வாறு சொல்வது தவறு என்றும் உணர்வுகளை தூண்டக் கூடியது என்றும் அது வருணித்தது.

குவாந்தான் கெபெங்கில் 700 மில்லியன் ரிங்கிட் செலவில் அந்தத் தொழில் கூடம் அமைக்கப்படுவதற்கு அனைத்துலக அணு எரிபொருள் நிறுவனம் அனுமதி அளித்துள்ளது. அதன் நடவடிக்கைகள் அனைத்துலக கதிரியக்கத் தரங்களுக்கு ஏற்ப இருப்பதாகவும் அது குறிப்பிட்டது.