குதப்புணர்ச்சி வழக்கு ll விசாரணையில் தாங்கள் சாட்சியமளிப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சியை முறியடிக்கும் வகையில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் அவரது துணைவியார் ரோஸ்மா மான்சோரும் அன்வாருக்கு எதிராக குற்றம் சாட்டப்படுவதற்கு தாங்கள் சதி செய்ததாக கூறப்படுவதை மறுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்குமாறு கோரும் சபினாவை தள்ளுபடி செய்யுமாறு அவர்கள் இருவரும் சமர்பித்த விண்ணப்பத்தை வரும் வியாழக்கிழமை விசாரிக்கும் போது அவர்களுடைய வாதத்தின் முக்கிய அடிப்படையாக அது இருக்கும் என ஒரு வட்டாரம் கூறியது.
2008ம் ஆண்டு ஜுன் மாதம் 24ம் தேதி இரவு புகார்தாரரான முகமட் சைபுல் புஹாரி அஸ்லானைச் சந்தித்ததை நஜிப் ஏற்கனவே ஒப்புக் கொண்டுள்ளார். போலீசாரிடம் தமது புகாரைக் கொண்டு செல்லுமாறு தாம் சைபுலுக்கு அறிவுரை கூறியதாகவும் அப்போது துணைப் பிரதமராக இருந்த அவர் சொன்னார்.
அரசு தரப்பு விசாரணையின் போது அன்வார் குறித்து தாம் நஜிப்பிடம் புகார் செய்ததாக சைபுல் சாட்சியமளித்துள்ளார். (ஆனால் அவரது புகார் உள்ளடக்கம் நீதிமன்றப் பதிவேடுகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளது)
அப்போது அன்வாருக்கு அரசியல் உதவியாளராக இருந்த சைபுலை அந்த வேளையில் சந்தித்ததை ரோஸ்மா மறுப்பார் என்றும் தெரிய வருகிறது. அதற்கு சைபுல் சாட்சியமும் இசைவாக உள்ளது.
குற்றச்சாட்டு தயாரிக்கப்படுவதற்கு உடந்தையாக இருக்குமாறு தாம் உத்தரவிடவில்லை அல்லது மற்றவர்களைக் கேட்டுக் கொள்ளவில்லை என்றும் நஜிப் நீதிமன்றத்தில் சொல்லக் கூடும் என மேலும் தெரிய வருகிறது.
ஆகவே தங்களை சாட்சிகளாக அழைப்பதற்கு பிரதிவாதித் தரப்பு செய்து கொண்டுள்ள விண்ணப்பம் நீதிமன்ற நடைமுறையை தவறாக பயன்படுத்துவதற்கு ஒப்பாகும் என்றும் நஜிப்பும் ரோஸ்மாவும் வாதாடக் கூடும்.
அவர்களுடைய அபிடவிட் மனுக்கள் கடந்த புதன் கிழமை அவர்களுடைய வழக்குரைஞர்கள் வழி நீதிமன்றப் பதிவாளருக்கு சமர்பிக்கப்பட்டன. அதில் அன்வாரும் அரசு வழக்குரைஞரும் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
2008ம் ஆண்டு ஜுன் மாதம் 26ம் தேதி தேசா டமன்சாரா ஆடம்பர அடுக்கு மாடி தொகுதியில் சைபுலை குதப்புணர்ச்சியில் ஈடுபடுத்தியதாக அன்வார் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவர், குற்றம் சாட்டப்பட்டவருக்கான கூண்டிலிருந்து அவர் தமது எதிர்வாதத்தை வழங்கியுள்ளார்.

























