ரேலா உறுப்பினர்களுக்குக் காப்புறுதித் திட்டம்

உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் உசேன், மக்கள் தன்னார்வலர் படை (ரேலா) உறுப்பினர்களுக்கு கடமையாற்றும்போது ஏற்படும் விபத்துகளுக்குக் காப்புறுதி வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார்.

இவ்வாண்டு செப்டம்பர் 5-இலிருந்து 2014 செப்டம்பர் 4 வரைக்குமான அத்திட்டம்  ரிம40,000 வரை காப்புறுதி வழங்கும் என்றாரவர்.

“தொடக்கத்தில், அதன்வழி 100,000 ரேலா உறுப்பினர்கள் பயனடைவர்”, என்று நேற்றிரவு பியுஃபோர்டில் டேவான் பாக் மூசா-வில் ரேலா,அரசாங்கத் தலைவர்கள் சந்திப்பின்போது ஹிஷாமுடின் கூறினார்.

அக்காப்புறுதித் திட்டம் இறப்பு, நிரந்தர செயலிழப்பு, பகுதி நிரந்தர செயலிழப்பு, மருத்துவச் செலவு, மருத்துவமனை அலவன்ஸ், செயற்கை உறுப்புப் பொருத்தல், இறப்பு உதவிப்படி முதலியவற்றை உள்ளடக்கி இருக்கும் என்றாரவர்.

இவ்வாண்டு செப்டம்பர் 27 முடிய சுமார் மூன்று மில்லியன் பேர் ரேலாவில் உறுப்பியம் பெற்றுள்ளனர்.

-பெர்னாமா