பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா, இன்னொரு நிறுவனம் 1965ஆம் ஆண்டு நிறுவனச் சட்டத்தை மீறியுள்ளதாகக் கூறினார். ஆனால், மனித உரிமைப் போராட்ட அமைப்பான சுவாராமை விடாமல் துரத்தும் மலேசிய நிறுவனங்களின் ஆணையம் (சிசிஎம்), அந்த நிறுவனத்தின் விசயத்தில் கவனம் செலுத்துவதுபோல் தெரியவில்லை.
நாட்டின் புதிய சிக்கன விமான நிறுவனமான மேலிண்டோ ஏர்வேய்ஸின் பங்காளி நிறுவனமான நேசனல் ஏரோஸ்பேஸ் அண்ட் டிபென்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பெர்ஹாட் (நாடி), 2007இலிருந்து அதன் தணிக்கை செய்யப்பட்ட கணக்கறிக்கையைச் சமர்பிக்கவில்லை என்று புவா இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர் கூட்டமொன்றில் தெரிவித்தார்.
“நாடி 2007, டிசம்பர் 31-இலிருந்து கணக்குகளைச் சமர்பிக்கவில்லை. இருந்தும் கடந்த மாதம் அரசாங்கம் அதற்கு மலேசியாவில் ஒரு விமான நிறுவனத்தை நடத்த உரிமம் கொடுத்தது. அந்த விமான நிறுவனத்தைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கே தொடக்கியும் வைத்தார்.
“அந்நிறுவனத்தின் தலைவர் ஜெனரல் (பணி ஓய்வு) முகம்மட் ஹஷிம் முகம்மட் அலி, (முன்னாள் பிரதமர்) டாக்டர் மகாதிர் முகம்மட்டின் மைத்துனர்”.
1965ஆம் ஆண்டு நிறுவனச் சட்டத்தின் 169(1)-வது விதி, நிறுவனத்தின் இயக்குனர்கள் அதன் இலாபநட்டக் கணக்கை ஒவ்வோர் ஆண்டும் அதன் ஆண்டுக்கூட்டத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்கிறது. ஒரு கணக்கறிக்கைக்கும் இன்னொரு அறிக்கைக்குமிடையில் 15 மாதங்களுக்குமேல் இடைவெளி இருத்தல் கூடாது.
இந்த விதியைப் பின்பற்றத் தவறும் இயக்குனர்களுக்கு ஐந்தாண்டுச் சிறையும் ரிம30,000 அபராதமும் விதிக்கப்படலாம்.
“இது, சுவாராம் விவகாரத்தில் சொல்லப்படுவதுபோல், ஊகத்தின் அடிப்படையில் சொல்லப்படுவதல்ல. எல்லாமே உண்மை. அப்படி இருக்கையில் சிசிஎம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை”, என்றவர் வினவினார்.
இன்னொரு நிறுவனம் ஒய்ஜிபி ஹோல்டிங்ஸ் சென்.பெர்ஹாட் 2006-இலிருந்து அதன் கணக்கைக் காண்பிக்கவில்லை என்றும் புவா கூறினார்.
அந்நிறுவனத்தின் இயக்குனர்கள் ரெம்பாவ் எம்பி கைருடின் ஜமாலுடின், கோத்தா பஎலுட் எம்பி அப்துல் ரஹ்மான் டாஹ்லான் ஆகியோராவர். தற்காப்பு அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி அதன் பங்குதாரர்களில் ஒருவர்.
‘அமைச்சரின் சம்பளத்தைக் குறைக்கத் தீர்மானம்’
இவை தவிர, ஊழலில் சிக்கிக் கொண்டிருக்கும் நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசன் 2009, டிசம்பர் 31-இலிருந்து அதன் கணக்கைத் தாக்கல் செய்யவில்லை.
“அம்னோவின் உயர்தலைவர்களுடன் தொடர்புகொண்ட இந்த நிறுவனங்களுக்கு எதிராக சிசிஎம் நடவடிக்கை எடுக்காதது ஏன்?
“மலேசியர் அனைவருக்காகவும் போராடும் அமைப்புகளை விரட்டிக் கொண்டிருக்காமல் இந்த மூன்று நிறுவனங்களுக்கும் எதிராக சிசிஎம் நடவடிக்கை எடுத்து அவற்றின் இயக்குனர்களை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம்”, என்று புவா குறிப்பிட்டார்.
சிசிம் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் உள்நாட்டு வாணிக, கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கூப், சிசிஎம் தலைமை செயல் அதிகாரி முகம்மட் நயிம் டாருவிஷ் ஆகியோரின் சம்பளத்தில் ரிம10-ஐ வெட்ட வேண்டும் என்று கோரும் தீர்மானம் ஒன்றை பக்காத்தான் ரக்யாட் நாடாளுமன்றத்தில் கொண்டுவரும் என்றாரவர்.