எரிசக்தி அமைச்சர்: மின் கட்டண உயர்வைத் தவிர்க்க முடியாது

நிலக்கரி, இயற்கை எரி வாயு உட்பட எரிபொருட்களின் விலைகள் உலக அளவில் கூடிக் கொண்டே போகின்றன. அதனால் எதிர்காலத்தில் மின் கட்டணத்தை மாற்றம் செய்வதைத் தவிர்க்க முடியாது என எரிசக்தி, பசுமைத் தொழில்நுட்ப, நீர் வள அமைச்சர் பீட்டர் சின் கூறியிருக்கிறார்.

மின் கட்டண உயர்வு எப்போது எந்த அளவுக்கு உயர்த்தப்படும் என்பதை அவர் விவரிக்கவில்லை என்றாலும் மின்சார விலைகள் அதிகமாக இருக்கும் போது எரிசக்தியைச் சிக்கனமாக பயன்படுத்தும் பழக்கம் மக்களிடையே அதிகரிக்கும், அத்துடன் அவர்கள் பசுமைத் தொழில்நுட்பப் பொருட்களையும் நாடத் தொடங்குவர் என்பதை சின் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் மின் பயனீடு ஆண்டுக்கு 3.4 விழுக்காடு விகிதம் அதிகரித்து வருவதாக அவர் சீன மொழி நாளேடான சின் சியூ-வுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

அந்த விகிதம் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தை விட சற்று குறைவாகும் என்றார் அவர். மின் தேவை கூடுவதால் அரசாங்கம் அதிகமான மின் உற்பத்தி நிலையங்களுக்கு அனுமதி கொடுத்துள்ளது என்றும் அணு மின் உலையை பரிசீலிக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது என்றும் சின் சொன்னார்.

எடுத்துக்காட்டுக்கு டென்மார்க்கில் கடந்த 20 ஆண்டுகளாக மின் பயனீடு ஒரே நிலையில் இருந்து வருகின்றது எனக் குறிப்பிட்ட அவர், கூடுதலான பொருளாதார வளர்ச்சி என்பது அதிகமான மின் பயனீட்டைக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்றார்.

“ஒரு வேளை நாம் மின் பயனீடு கூடுவதைத் தவிர்க்க முடியாமல் போனாலும் அந்த அதிகரிப்பு விகிதத்தை குறைக்க இயலுமானால் நாம் மேலும் மின் உற்பத்தி நிலையங்களைக் கட்டுவதைத் தள்ளி வைக்க முடியும்.”

எரிசக்தியைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டிய அவசியம் குறித்த விழிப்புணர்வை பொது மக்களிடமும் பிள்ளைகளிடமும் அதிகரிக்க வேண்டும் என சின் வலியுறுத்தினார்.

அடுத்து வரும் ஆண்டுகளில் குறைந்தது ஒரு அணு மின் உற்பத்தி நிலையம் ஒன்றைக் கட்டுவது குறித்து அரசாங்கம் பரிசீலிப்பதை அவர் ஒப்புக் கொண்டதாக சின் சியூ குறிப்பிட்டது.

என்றாலும் இறுதி முடிவு செய்யப்படவில்லை என அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். நவம்பர் மாதம் மின் கட்டணம் உயருமா என்ற கேள்விக்கு பதில் அளிக்க சின் மறுத்து விட்டார்.

எதிர்காலத்தில் தேசிய மின் கட்டண விகிதங்களை முடிவு செய்வதற்கு ‘எரிபொருள் விலை அடிப்படை முறையை’ பின்பற்ற கூட்டரசு அரசாங்கம் ஏற்கனவே இணங்கியுள்ளது.

மின் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் இயற்கை எரிவாயு உதவித் தொகையை 2016ம் ஆண்டு சந்தை விலையை எட்டும் வரையில் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை mmBtuவுக்கு 3 ரிங்கிட் குறைக்கப்படுவதின் தொடர்பில் அந்த இணக்கம் காணப்பட்டது.

என்றாலும் கடந்த ஆண்டு ஜுன் மாதம் மின் கட்டணத்தைச் சராசரி 7.12 விழுக்காடு அரசாங்கம் உயர்த்தியது. அதற்குப் பின்னர் கட்டண விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அந்த விஷயம் கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட 2013ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்படவே இல்லை. வரும் பொதுத் தேர்தலை ஒட்டி அந்த விஷயம் உணர்ச்சிகரமானது எனக் கருதப்படுகின்றது. அடுத்த ஆண்டு ஜுன் மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.