சபாவில் சட்ட விரோதமாகவும் சட்டப்பூர்வமாகவும் உள்ள கிட்டத்தட்ட ஒரு மில்லியன் அந்நியக் குடியேற்றக்காரர்கள் மாநிலம் அல்லது நாட்டின் பாதுகாப்புக்கும் அமைதிக்கும் எந்த அபாயத்தையும் ஏற்படுத்தவில்லை எனப் பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் கூறுகிறார்.
“மற்ற மாநிலங்களைப் போல அங்கு நிலைமை கட்டுக்குள் இருக்கிறது,” என அவர் இன்று மக்களவையில் கேள்வி நேரத்தின் போது பதில் அளித்தார்.
போலீஸ், ரேலா, குடிநுழைவு அதிகாரிகள் ஆகியோரும் சட்ட விரோதக் குடியேற்றக்காரர்கள் மீதான கூட்டரசுப் பணிக்குழுவும் நிலமையைக் கட்டுக்குள் வைத்துள்ளதாக அவர் மேலும் சொன்னார்.
துவாரான் சுயேச்சை எம்பி வில்பிரெட் பூம்புரிங் வாய்மொழியாக எழுப்பிய கேள்விக்கு மறுமொழி அளித்த நஸ்ரி பல்வேறு குற்றங்களுக்காக இவ்வாண்டு செப்டம்பர் மாதம் 19ம் தேதி வரையில் மொத்தம் 70,327 சட்ட விரோதக் குடியேற்றக்காரர்கள் நாடு கடத்தப்பட்டதாக தெரிவித்தார்.
அதனை அடுத்து பூம்புரிங் பல துணைக் கேள்விகளை அமைச்சரை நோக்கித் தொடுத்தார்.
சபாவில் அந்நியக் குடியேற்றக்காரர்கள் பிரச்னை மீது ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையத்தை அமைக்காமல் அரசாங்கம் ஏன் இன்னும் காலம் தாழ்த்திக் கொண்டே போகிறது என்ற கேள்வியும் அதில் அடங்கும்.
ஆர்சிஐ பரிந்துரைகளுக்கு அரசாங்கம் செவி சாய்க்குமா என்றும் 1963ம் ஆண்டு அந்த மாநிலம் மலேசியாவில் இணைந்த போது வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு இணங்க சபா இறையாண்மை பாதுகாக்கப்படுமா என்றும் எல்லைகள் கண்காணிக்கப்பட்டு சட்ட விரோதக் குடியேற்றக்காரர்கள் வருவது தடுக்கப்படுமா என்றும் அறிய பூம்புரிங் விரும்பினார்.
பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளதால் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தின் போது நிகழ்த்தும் உரையில் அவற்றைச் சேர்த்துக் கொள்ளுமாறு பூம்புரிங்கை நஸ்ரி கேட்டுக் கொண்டார். அவற்றுக்கு தமது அமைச்சு மீதான விவாதங்களை நிறைவு செய்து வைக்கும் போது பதில் அளிப்பதாக அவர் உறுதி அளித்தார்.
“நான் இங்கு எழுந்து நின்று பதில் அளிப்பேன்,” என நஸ்ரி வாக்குறுதி அளித்தார்.