இரண்டாம் தலைமுறை பெல்டா குடியேற்றக்காரர்களைப் பிரதிநிதிக்கும் ஒர் அரசு சாரா அமைப்பான அனாக் ஆர்ஒஎஸ் எனப்படும் சங்கப் பதிவதிகாரி அலுவலகத்தில் பதிவு செய்யப்படவில்லை என்பதை அதன் தலைவர் மஸ்லான் அலிமான் ஒப்புக் கொண்டுள்ளார்.
அதனால் அந்த அமைப்பு செய்வது தவறு என அர்த்தமாகாது என மஸ்லான் சொன்னார்.
“பாஸ் முன்னுரிமை அளிக்கும் விஷயங்களில் ஒன்றான பெல்டா குடியேற்றக்காரர்களின் பிள்ளைகளுடைய நலன்களுக்கும் எதிர்காலத்துக்கும் நாங்கள் போராடுகிறோம்,” என சினார் ஹரியான் நாளேட்டில் இன்று வெளியான செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
2007ம் ஆண்டு நவம்பர் மாதம் பாஸ் கட்சியின் கீழ் ஒர் அமைப்பாக அனாக் தோற்றுவிக்கப்பட்டது. அது கட்சியின் அமைப்பு விதிகளை பின்பற்றுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
என்றாலும் அனாக் அமைப்பின் பெயரில் உள்ள தனி வங்கிக் கணக்கு மூலம் தனது சொந்த நிதிகளை நிர்வாகம் செய்து வருகிறது என்றும் மஸ்லான் குறிப்பிட்டார்.
அனாக்-கின் சட்டப்பூர்வத் தன்மை குறித்து கேள்வி எழுப்புவது அந்த அரசு சாரா அமைப்பு எழுப்பியுள்ள உண்மையான பிரச்னைகளை மறைப்பதற்கு செய்யப்படும் தந்திரமாகும் என அவர் சொன்னார்.
அவற்றுள் FGV பெல்டா குளோபல் வெண்சர்ஸ் ஹோல்டிங்ஸ் பங்கு விலை சரிந்துள்ளதும் அடங்கும் என்றார் அவர்.
விவாதம் புரிவதை தவிர்ப்பதற்கான காரணம்
அனாக் சட்ட விரோத அமைப்பு எனப் பிரதமர் துறை துணை அமைச்சர் அகமட் மஸ்லான் கூறிக் கொண்டுள்ளதற்கு பாஸ் மத்தியக் குழு உறுப்பினருமான மஸ்லான் பதில் அளித்தார்.
அனாக் “சட்டப்பூர்வ அமைப்பு இல்லை” என்பதால் மஸ்லானுடன் விவாதம் நடத்த தாம் மறுப்பதாக பெல்டாவுக்கு பொறுப்பேற்றுள்ள அகமட் சொன்னதாக சினார் ஹரியானின் இன்னொரு செய்தி தெரிவித்தது.
“நான் அவருடன் (மஸ்லானுடன்) விவாதம் நடத்த விரும்பவில்லை என்பது முக்கியமல்ல. நான் அவருக்கு இலவசமாக விளம்பரம் கொடுக்க விரும்பவில்லை,” என அகமட் சொன்னார்.
“அனாக் ‘தனது எல்லைகளை’ அறிந்திருக்க வேண்டும். அது முதலில் தன்னை சங்கப்பதிவதிகாரி அலுவலகத்தில் ( ஆர்ஒஎஸ் ) பதிந்து கொள்ள வேண்டும். ”
அரசு சாரா அமைப்புக்கள் ஆர்ஒஎஸ்-ஸில் பதிவு செய்து கொள்ளாததை, அவை சட்டப்பூர்வமாக இயங்கவில்லை எனக் கூறி அரசாங்கம் அதனை ஒரு பிரச்னையாக்கி வருகின்றது.
மனித உரிமைப் போராட்ட அமைப்பான சுவாராம் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல்களில் அது தெளிவாகத் தெரிகிறது. சுவாராம் ஒரு சங்கமாகப் பதிவு செய்யப்படாமல் நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதும் அது அந்நிய நிதிகளைப் பெறுவதும் ‘சந்தேகத்தை’ தருகிறது என பிஎன் ஆதரவு ஊடகங்களில் சித்தரிக்கப்படுகின்றது.