கோலா சிலாங்கூர் பிகேஆர் தொகுதி செயல்குழு உறுப்பினர் ஒருவர், தொகுதியில் கணக்கறிக்கை கொடுக்கப்படாததை போலீசிலும் மலேசிய ஊழல்தடுப்பு ஆணையத்திடமும் புகார் செய்ய விரும்புகிறார்.
தொகுதித் தலைவர் பதவிக்காக சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிமை எதிர்த்துப் போட்டியிட்டவரான மஸ்லி சாரிங், அத்தொகுதியின் 2010 கணக்கறிக்கை நேற்று அதன் ஆண்டுக்கூட்டத்தில் (ஏஜிஎம்) தாக்கல் செய்யப்படவில்லை என்றார்.
“அந்த (கடந்த ஆண்டு) அறிக்கையும் அடுத்த ஆண்டுவரை (2012) தாமதப்படுத்தப்பட்டது. அறிக்கையில் தவறுகள் இருந்ததால் அதைத் தனியே தணிக்கை செய்யப்போவதாக தலைவர் கூறினார்.
“ஆனால், மறு ஆண்டிலும் கொடுக்கப்படவில்லை. இப்போது ஈராண்டு அறிக்கைகளும் 2013-இல் தாக்கல் செய்யப்படுமென்கிறார்கள்”, என்று நேற்றைய ஏஜிஎம்-முக்குப் பின்னர் தொடர்புகொண்டபோது மஸ்லி தெரிவித்தார்.
கணக்கறிக்கை குறித்து எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதையும் பொருட்படுத்தாமல் தொகுதித் தலைவர் ஏஜிமைத் தொடர்ந்து நடத்தினார் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
“இதைப் பற்றி மற்ற உறுப்பினர்களுடன் விவாதித்து போலீசிலும் எம்ஏசிசி-இலும் புகார் செய்யப் போகிறேன். இவ்விவகாரத்தை உயர்மட்டம்வரை கொண்டு செல்வேன்”, என்றார்.
காலிட் தலைமையில் செயல்படும் அத்தொகுதி, ஏஜிஎம் பற்றி உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கவில்லை என்றும் மஸ்லி கூறினார்.
கட்சி அமைப்புவிதியின்படி ஏஜிஎம்-முக்கு 30 நாள்களுக்கு முன்னதாகவே அது பற்றி அறிவிக்கை அனுப்பப்பட வேண்டும்.
“ஒரு சில உறுப்பினர்களுக்கு மட்டுமே அறிவிக்கைகள் அனுப்பப்பட்டன”.
கடந்த அக்டோபரிலும் கணக்கறிக்கைதான் சர்ச்சைக்குக் காரணமாக இருந்தது.
அந்த அறிக்கையில் இருந்த கையெழுத்து சரியானதுதானா என்று பலர் கேள்வி எழுப்பியதால் பிரச்னை உண்டானது.
மஸ்லி(இடம்) 2010-இல் கோலா சிலாங்கூர் தொகுதித் தலைவர் பதவிக்கு மந்திரி புசாரை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோற்றவராவார். அத்தேர்தலில் அவருக்கு 122 வாக்குகளும் காலிட்டுக்கு 722 வாக்குகளும் கிடைத்தன.
இதனிடையே நேற்று ஏஜிஎம்-மைத் தொடக்கிவைத்து உரையாற்றிய காலிட், பிகேஆர் உறுப்பினர் சிலர் கட்சியில் குறைகாண்பதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.
இதனைத் தெரிவித்த பெர்னாமா, “சுயநலனில் அதிக ஆர்வம் கொண்டிருக்கிறார்கள்.அதனால்தான் இவ்வாறு நிகழ்கிறது”, என்றவர் குறிப்பிட்டதாகக் கூறுகிறது.
“இது சரியல்ல, கட்சியின் இலக்கை அடைவதில் நாம் கூடுதல் முதிர்ச்சி நிலையை வெளிப்படுத்த வேண்டும்”, என்றவர் வலியுறுத்தினார்.