இரண்டு வாரங்களுக்குமுன் பெட்டாலிங் ஜெயாவில் டமன்சாரா தேவாலயம் ஒன்றில் நடந்த விருந்துக்குச் சென்றிருந்த 12 முஸ்லிம்கள் இன்று சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத்துறைக்கு (ஜயிஸ்) சென்றனர்.
அந்த 12 பேரையும் நேர்காணல் செய்வதற்காக ஜயிஸ் அழைத்திருப்பதாகத் தெரிகிறது. அவர்களில் 10 பேரைப் பிரதிநிதிக்கும் வழக்குரைஞர் இதை உறுதிப்படுத்தினார். மற்ற இருவர் வழக்குரைஞர் யாரையும் அமர்த்தியிருப்பதாகத் தெரியவில்லை.
“ஆம், அவர்கள் ஜயிஸைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்”, என்று கூறிய அவர்கள் அது வெளியில் தெரிவதை அவரின் கட்சிக்காரர்கள் விரும்பவில்லை என்றார்.
கடந்த வாரம் ஜயிஸ் அவர்களிடம், “முஸ்லிம்களை மதம் மாறத் தூண்டிவிட்ட அல்லது வற்புறுத்திய குற்றம்” நிகழ்திருப்பதாகக் கூறி அதன் அடிப்படையில் விசாரணை செய்வதாகக் கூறியுள்ளது.
அந்த 12 பேர் பற்றிய விவரங்களை ஜயிஸ் அதிகாரிகள், ஹராபான் கொம்முனிடி என்னும் அரசுசாரா அமைப்பு ஏற்பாடு செய்திருந்த விருந்தில் அதிரடிச் சோதனை நடத்தியபோது குறித்துக்கொண்டார்கள்.
ஜயிஸ், தான் நடத்தியது ஒரு அதிரடிச் சோதனை என்பதை மறுத்து அது ஒரு “பார்வையிடல் வருகை” என்று கூறியது.
முன்னதாக, சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிம், ஜயிஸ் நடவடிக்கை பற்றிய முழு அறிக்கை விரைவில் தயாராகிவிடும் என்று ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
“தேவாலயத்தில் ஜயிஸ் மேற்கொண்ட சோதனை மீதான முழு அறிக்கை வரையப்பட்டு வருகிறது. அது தயாரானதும் சிலாங்கூர் சுல்தானிடம் ஒப்படைக்கப்படும்”, என்று மந்திரி புசார் குறிப்பிட்டார்.
ஜயிஸ் அதிகாரி ஒருவரும் அறிக்கை தயாராகி வருவதை உறுதிப்படுத்தினார். ஆனால்,அறிக்கை தயாரான பிறகே ஜயிஸ் அது பற்றி கருத்து தெரிவிக்கும் என்றார்.