காலஞ்சென்ற லாரன்ஸ் செல்வநாதனைத் தகனம் செய்த அவரின் உறவினர்கள்மீது ஷியாரியா நீதிமன்றத்தில் நெகிரி செம்பிலான் இஸ்லாமிய சமய விவகாரத் துறையால் வழக்கு தொடுக்க இயலாது என்று மதமாற்ற வழக்குகளில் நன்கு பரிச்சயமுள்ள வழக்குரைஞர்கள் கூறுகிறார்கள்.
உறவினர்கள், கிறிஸ்துவர்கள். எனவே அவர்களை ஷியாரியா நீதிமன்றம் கொண்டுசெல்ல முடியாது என்கிறார் பிரபல ஷியாரியா வழக்குரைஞர் முகம்மட் பூரோக்.
சம்பந்தப்பட்டவர்கள் எல்லாருமே முஸ்லிம்களாக இருந்தால் மட்டுமே அவர்களை ஷியாரியா நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்ல முடியும்.
“இதுதான் சட்டம்”, என்று முகம்மட்(வலம்) கூறினார்.
அவர் சொன்னதை வழக்குரைஞர் எம். குலசேகரனும் ஒப்புக்கொண்டார்.கூட்டரசு அரசமைப்பு, பகுதி 121இல் இணைக்கப்பட்ட சட்டவிதி (1A)-இன்படி,மலேசியாவில் இரண்டு இணை சட்டக் கட்டமைப்பு உண்டு என்பதைத் தெளிவாகக் குறிப்பிடுகிறது.
அந்தச் சட்டவிதி, “ஷியாரியா நீதிமன்றத்தின் அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உயர்நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை”, என்று கூறுகிறது.
மேலும், ஷியாரியா நீதிமன்றம் “இஸ்லாத்தைப் பின்பற்றுவோர்மீது மட்டுமே” அதிகாரம் செலுத்த முடியும் என்பதையும் அது குறிப்பிடுகிறது.
“அதன் அடிப்படையில் ஷியாரியா சட்டத்தை முஸ்லிம்-அல்லாதார்மீது பயன்படுத்த முடியாது.அவர்களை நீதிமன்றம் வரச் சொல்லி ஆணை பிறப்பிக்க முடியாது, நீதிமன்றத்தை அவமதித்தார்கள் என்று வழக்கு தொடுக்கவும் முடியாது”, என்று குலசேகரன் கூறினார்.
இது, லாரன்ஸின் இறுதிச்சடங்குகளை நிறுத்தக் கோரி நெகிரி செம்பிலான் இஸ்லாமிய சமய விவகாரத் துறை பெற்ற ஷியாரியா நீதிமன்ற ஆணைக்கும் பொருந்தும் என்று, ஈப்போ பாராட் எம்பியுமான குலசேகரன் குறிப்பிட்டார்.
குலசேகரன் கூறியதை முகம்மடும் ஒப்புக்கொண்டார். ஷியாரியா நீதிமன்ற ஆணை முஸ்லிம்-அல்லாதாரைக் கட்டுப்படுத்தாது என்றாரவர்.
காலஞ்சென்ற ஒருவர் அவரின் குடும்பத்துக்குத் தெரியாமலே மதம் மாறினார் என்கிறபோது அவரை இஸ்லாமிய சடங்குமுறையுடன் அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு இஸ்லாமிய சமய விவகாரத் துறைகளால் அவரது குடும்பத்தாரைக் கேட்டுக்கொள்ள மட்டுமே முடியும்.
“நீதிமன்றத்தின் அதிகாரம் குறுகலாக இருப்பது கண்டு ஷியாரியா வழக்குரைஞர்களே வெறுப்படைந்து போகிறார்கள். ஆனால், அதுதான் சட்டம்”, என்று முகம்மட் கூறினார்.
ஆனால், இன்னொரு ஷியாரியா வழக்குரைஞர், சுல்கிப்ளி ச்சே யோங் அதை மறுக்கிறார். அப்படிப்பட்ட விவகாரங்களிலும், சம்பந்தப்பட்டவர்கள் முஸ்லிம்-அல்லாதாராக இருந்தாலுங்கூட ஷியாரியா நீதிமன்றத்துக்கு அதிகாரம் உண்டு என்கிறார் அவர்.
“அது விசயத்தைப் பொறுத்துள்ளது. இது மதமாறியவர் என்று சொல்லப்படும் ஒருவர் சம்பந்தப்பட்ட விசயம்”. இது தெளிவாக இருக்கிறது. ஆனால் அந்தக் குடும்பத்தார்மீது நீதிமன்றத்தை அவமதித்த குற்றம் சுமத்த முடியுமா என்பதுதான் தெளிவாக தெரியவில்லை என்றாரவர்.
லாரன்ஸ் இறந்துபோவதற்கு மூன்று நாள் முன்னதாக இஸ்லாத்துக்கு மதம் மாறினார் என்றும் அதை உறுதிப்படுத்தும் சான்றிதழும் வீடியோ பதிவும் தன்னிடம் இருப்பதாக நெகிரி செம்பிலான் இஸ்லாமிய சமய விவகாரத்துறை கூறுகிறது.
லாரன்ஸின் இறுதிச் சடங்குகளை நிறுத்துமாறு கூறும் நீதிமன்ற ஆணை செப்டம்பர் 22 பிற்பகல் மணி 12.30க்கு அக்குடும்பத்தாரிடம் சார்வு செய்யப்பட்டது என்று அது கூறியது.அன்று பிற்பகல் மணி 3.00 க்கு லாரன்ஸ் செல்வநாதனின் உடல் சிறம்பானிலுள்ள தேவாலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, சடங்குகள் முடிவுற்ற பின்னர் அடக்கம் செய்யப்படுவதாக இருந்தது. அவரது குடும்பத்தினர் அவ்வாறு செய்வதைத் தடுத்ததாகவும் ஆனால் இறந்துபோனவரின் நண்பர்கள் தன்னிச்சையாக செயல்பட்டு உடலைத் தகனம் செய்துவிட்டார்கள் என்றும் சமய விவகாரத்துறை கூறிற்று.
மதமாற்றம் தொடர்பில் அடிக்கடி சர்ச்சைகள் ஏற்படுவதைத் தடுக்க 1976ஆம் ஆண்டு சட்டச் சீர்திருத்த(திருமணம், மணமுறிவு)ச் சட்டம், இஸ்லாமிய சட்ட நிர்வாக(கூட்டரசு பிரதேச)ச் சட்டம் ஆகியவற்றில் திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்று அரசாங்கம் 2009-இல் அறிவித்தது.
தித்தங்கள் இன்னும் இல்லை
அதற்காக பிரதமர்துறை அமைச்சர் கோ சூ கூன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு அதன் முடிவுகள் ஆட்சியாளர் மன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டது என்று குலசேகரன் கூறினார்.
“அதன்பின் ஒன்றும் நடக்கவில்லை. இவ்விவகாரத்துக்குத் தீர்வுகாணப்படாமல் இருப்பதற்குக் காரணம் அரசாங்கம்தான். இவ்விவகாரம் அரசியல் ரீதியில் சிக்கலை உண்டு பண்ணலாம் என்றும் எளிதில் உணர்ச்சிவசப்பட வைக்கும் என்றும் அது அஞ்சுகிறது.
“ஆனால், நடைமுறைக்கேற்ற, யதார்த்தமான அரசாக இருந்தால் என்ன செய்யும்….இதனால் குடும்பங்களில் ஏற்படும் மன அழுத்தங்களையும் பிளவுகளையும் எண்ணிப் பார்க்கும்……அரசாங்கத்திடம் மன உறுதி இல்லை”, என்றாரவர்.