என்எப்சி: இலக்குகளை அடைய முடியாமல் போனதற்கு விவசாய அமைச்சுதான் காரணம்

கூட்டரசு அரசாங்கத்தினால் பல தடங்கல்கள் ஏற்பட்டதுதான்  கால்நடை வளர்ப்புத் திட்டத்தைப் பூர்த்தி செய்ய முடியாமல் போனதற்குக் காரணம் என நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசன் பழியைக் கூட்டரசு அரசாங்கத்தின்மீது போட்டுள்ளது.

அந்நிறுவனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி அரசு ஆலோசிப்பதாக செய்தி வெளியானதை அடுத்து என்எப்சி தலைவர் முகம்மட் சாலே இஸ்மாயில் இன்று ஓர் அறிக்கையில் இவ்வாறு கூறினார்.

கூட்டரசு அரசாங்கம், அந்நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்ட ரிம250 மில்லியன் கடனைத் திரும்பப் பெறும் வழிமுறைகளை ஆராய்ந்து வருவதாக தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை தெரிவித்திருந்தது.

தாம் தவறு செய்ததாகக் கூறப்படுவதை மறுத்த சாலே, என்எப்சி-இன் உற்பத்திக்குப் பிரச்னைகளை உண்டாக்கியது விவசாய அமைச்சுத்தான் என்பதால் சட்டத்துறைத் தலைவர் “நியாயமாக” முதலில் அதைத்தான் விசாரிக்க வேண்டும் என்றார்.

விவசாய அமைச்சு நாளுக்கு 350 மாடுகளை அறுக்கும் திறன் கொண்ட அறுப்புக்கூடத்தைக் கட்டித் தந்திருக்க வேண்டும். அதைக் கட்டும் பணி தள்ளிப்போடப்பட்டதால் என்எப்சியின் உற்பத்தி பாதிப்படைந்தது.

சட்டத்துறைத் தலைவர்கள் பக்காத்தான் ரக்யாட் சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்குச் செவிசாய்க்கக் கூடாது என்றும்  2010 தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விவகாரங்களில் அடிப்படையில்தான் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதற்குமுன் விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில் அமைச்சர் நோ ஒமார், அரசாங்கம் சொன்னபடி சிலவற்றை என்எப்சிக்கு செய்துகொடுக்கவில்லை என்றும் அவற்றில் அறுப்புக்கூடம் கட்டித்தருவதும் ஒன்று எனச் சொல்லியிருந்தார்.

TAGS: