ஒரு முன்னாள் பணிப்பெண் இந்தோனேசியாவில் ரிம100,000 பெறும் ஆடம்பர வீடு வாங்கியுள்ளார். அது எப்படி என்பதை ஓர் அரசியல் உயர் தலைவர்தான் விளக்க வேண்டும் என்கிறது பிகேஆர் தொடர்புள்ள என்ஜிஓ-வான ஜிங்கா 13.
இதன் தொடர்பில் குறிப்பிட்ட அந்த அரசியல் தலைவரின் அலுவலகத்தில் ஒரு மகஜரை ஒப்படைத்த ஜிங்கா 13 ஒருங்கிணைப்பாளர் ஃபாரிஸ் மூசா, மலேசியாவில் குறைந்த வருமானம் பெற்று வந்த அப்பெண்ணால் அந்த வீட்டை அவ்வளவு விலை கொடுத்து வாங்கி இருக்க முடியாது என்றார்.
“முதல் சில ஆண்டுகளுக்கு மாதம் ரிம300 பெற்றார். பின்னர் ரிம500. இதை வைத்துகொண்டு ரிம50,000கூட சேமித்திருக்க முடியும் என்று நினைக்கவில்லை.”
2007-இல் இந்தோனேசியா திரும்பியதிலிருந்து அவர் வேலை செய்யவில்லை என்றும் அவர் சொன்னார்.
இந்தத் தகவல் எப்படி அந்த என்ஜிஓ-வுக்குக் கிடைத்தது என்று கேட்டதற்கு, ஜிங்கா 13-இன் ஆய்வுக்குழு ஒன்று இந்தோனேசியா சென்று அப்பணிப்பெண்ணை சந்தித்து நேர்காணல் ஒன்றை நடத்தியது என்றார்.
“எங்களுடன் வந்த இந்தோனேசிய நண்பர்கள் அந்த வீட்டின் மதிப்பு ரிம100,000 இருக்கலாம் என மதிப்பிட்டனர்.
“வேலி, தட்டுமுட்டுச் சாமான்கள் எல்லாமே தனியே வடிவமைக்கப்பட்டவை.அவற்றைக் குறைந்த விலையில் பெற்றிருக்க முடியாது.”
பணம் எங்கிருந்து வந்தது என்பதை அப்பணிப்பெண் தெரிவித்தாரா என்று வினவியதற்கு, மலேசிய அதிகாரிகளை நினைத்து அவர் பேசுவதற்கே அஞ்சினார் என்றார். நேர்காணலின்போது அவரின் கணவரும் குறுக்கிட்டுக் கொண்டு இருந்தார்.
இவ்விவகாரத்தை இந்தோனேசிய தூதரகத்துக்குத் தெரியப்படுத்துவதுடன் போலீசிலும் மலேசிய ஊழல்தடுப்பு ஆணையத்திலும் புகார் செய்யப்போவதாக ஃபாரிஸ் கூறினார்.