மலேசியா உருவானபோது அது சமயச் சார்பற்ற நாடாக உருவாக்கப்படவில்லை.
இதனை வலியுறுத்திய பிரதமர்துறை அமைச்சர் முகம்மட் நஸ்ரி அப்துல் அசீஸ், அது அவ்வாறு அறிவிக்கப்பட்டதுமில்லை, அப்படித்தான் இருக்க வேண்டும் என்று முடிவுசெய்யப்பட்டதும் இல்லை என்றார். இன்று மக்களவையில் கேள்வி நேரத்தின்போது அவர் இவ்வாறு கூறினார்.
“மலேசியா, மலாய் ஆட்சியாளர்களைக் கொண்ட ஓர் இஸ்லாமிய நாடு என்ற அடிப்படையில்தான் உருவானது…..மதச்சார்பின்மை என்று கூட்டரசு அரசமைப்பில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை”, என்று நஸ்ரி கூறினார்.
ஆனால், இஸ்லாம்தான் நாட்டின் சமயம் என்பது அரசமைப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்பின் அவர் அரசமைப்பிலும் சட்டங்களிலும் இஸ்லாத்தின் நிலையைப் பாதுகாக்கும் விதிகளை எடுத்துரைத்தார்.
அவை இஸ்லாம் நாட்டின் அதிகாரத்துவ சமயம் என்பதைக் குறிப்பிடுகின்றன; முஸ்லிம்களிடையே மற்ற சமயங்கள் பரப்பப்படுவதைத் தடுக்கின்றன; இஸ்லாமிய விவகாரங்களைக் கவனிக்கும் அமைப்புகளுக்கு அரசாங்கம் பண உதவி செய்ய வகை செய்கின்றன.
சிரம்பான் எம்பி ஜான் பெர்னாண்டஸ், சே ஒமார் X அரசுததரப்பு வழக்குரைஞர் வழக்கில் முன்னாள் தலைமை நீதிபதி சாலே அப்பாஸ் அளித்தத் தீர்ப்பை அடிப்படையாக வைத்து, மலேசியா ஒரு சமயச்சார்பற்ற நாடுதானா என்று கேட்டிருந்த கேள்விக்குப் பதில் அளித்தபோது நஸ்ரி இவ்வாறு கூறினார்.
அவ்வழக்கில் குறிப்பிடப்பட்டவை சமயச் சார்பற்ற சட்டங்கள் என்று குறிப்பிட்ட நஸ்ரி, அவை மலேசியா உருவாவதற்குமுன் இருந்த பிரிட்டிஷ் காலச் சட்டங்களாகும் என்றார்.
அவற்றை வைத்து மலேசியா ஒரு சமயச் சார்பற்ற நாடு என்று கூறவியலாது என்றவர் வலியுறுத்தினார்.
கிட் சியாங்: சமயச் சார்பற்ற நாடு என்று துங்கு அறிவித்துள்ளார்
இதனிடையே, 2013பட்ஜெட் மீதான குழுநிலை விவாதத்தில் பேசிய லிம் கிட் சியாங் (டிஏபி-ஈப்போ தீமோர்) நம் நாட்டை நிறுவியவர்களின் அறிக்கைகளும் அரசமைப்பு உருவாவதற்கு முந்திய ஆவணங்களும் மலேசியா சமயச் சார்பற்ற நாடு என்பதை நிரூபிப்பதாக கூறினார்.
1983-இல், நாட்டின் முதலாவது பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மானின் 80-வது பிறந்த நாளைக் கொண்டாட எல்லா பிஎன் தலைவர்களும் கூடியிருந்த கூட்டத்தில் சுதந்திரத் தந்தை மலேசியா ஒரு சமயச் சார்பற்ற நாடு என்று அறிவித்தார்.
1983 பிப்ரவரி 9 த ஸ்டாரின் முதல் பக்கத்தில் அச்செய்தி வெளிவந்திருந்தது.
“அதன்பின் மூன்றாவது பிரதமர் உசேன் ஒன், துங்கு மொழிந்ததை வழிமொழிந்தார். அது பிப்ரவரி 13-இல் அதே நாளேட்டில் தலைப்புச் செய்தியாக வந்தது ‘உசேன் ஓனும் இஸ்மாமிய நாடல்ல என்கிறார்’ என்று. இவையெல்லாம் சான்றுகள்”, என்று லிம் கூறினார்.
ரீட் கமிஷன் அறிக்கை போன்ற அரசமைப்புக்கு முந்திய ஆவணங்களில் மலேசியா சமயச் சார்பற்ற நாடு என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்.
“மலேசியா, இஸ்லாத்தை அதிகாரத்துவ சமயமாகக் கொண்டுள்ள சமயச் சார்பற்ற நாடு” என்று துங்கு கூறியுள்ளதை மீண்டும் எடுத்துக்காட்டினார் லிம்.
மலேசியாவுக்கு சாபா, சரவாக் மக்களின் ஆதரவைக் கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட கோப்போல்ட் கமிஷனில் இடம்பெற்றிருந்த கசாலி ஷாபியும், வொங் பெளனியும் மலேசியா ஒரு இஸ்லாமிய நாடாக மாறாது என்று சாபா, சரவாக் மக்களுக்கு உத்தரவாதம் அளித்ததையும் அவர் சுட்டிக் காட்டினார்.
“இப்படியெல்லாம் நாட்டை நிறுவியர்கள் சொல்லி இருக்கின்றார்கள். அவற்றினின்றும் விலகிச் செல்லலாகாது. ஆனால், மலேசியா சமயச் சார்பற்ற நாடு அல்ல என்று சொல்வதன் மூலம் இப்போதைய அரசாங்கம் விலகிச் சென்று விட்டது”.
ஆனாலும் மலேசியாவின் நிலை தனித்தன்மை வாய்ந்தது என்பதை லிம் ஒப்புக்கொண்டார். அது சமயச் சார்பற்ற நாடு ஆனால் அதன் அதிகாரத்துவ சமயம் இஸ்லாம் என்றார்.
மலேசியா சமயச் சார்பற்ற நாடு, இஸ்லாமிய நாடு என்ற வாதமும் எதிர்வாதமும் நீண்ட காலமாகவே நடந்து வருகிறது. சட்டங்களும் அரசமைப்பும் அதைத் தெளிபடுத்தவில்லை. என்றாலும் உலக முழுவதும் மலேசியா ஓர் இஸ்லாமிய நாடு என்றே அறியப்படுகிறது.