மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் இஸ்லாமிய நீதிபரிபாலன முறையில் நிபுணத்துவம் பெற்றவர் அல்ல. அதனால் ஹுடுட் பற்றிப் பேசுவதற்கு அவருக்கு தகுதி இல்லை என பேராக் முப்தி ஹாருஸ்ஸானி ஸாக்காரியா கூறியிருக்கிறார்.
“சமயம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. சமயம் தொடர்பான விஷயங்களைக் குறை கூறவும் வேண்டாம், சிறுமைப்படுத்தவும் வேண்டாம். ஏனெனில் அது நமது அகங்காரத்தையே காட்டுகின்றது,” என அவர் சொன்னதாக மலாய் மொழி நாளேடான சினார் ஹரியானில் இன்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஹுடுட் அமலாக்கப்பட்டால் 1.2 மில்லியன் பேர் வேலைகளை இழப்பது உட்பட பல சாத்தியமான விளைவுகள் குறித்து கடந்த வாரம் சுவா விடுத்த அறிக்கை பற்றை அவர் கருத்துரைத்தார்.
அந்த விவகாரம் கடந்த வார இறுதியில் நடைபெற்ற மசீச ஆண்டுப் பொதுக் கூட்டத்திலும் திரும்பத் திரும்ப எழுப்பப்பட்டது.
சட்ட அமலாக்கம் பலவீனமாக இருப்பதால் சில அரசியல் தலைவர்கள் ஹுடுட் மீது வெளிப்படையாக கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர் என ஹாருஸ்ஸானி எண்ணுகிறார்.
“அது தான் நமது பலவீனம்,” என அவர் கூறியதாக சினார் ஹரியான் செய்தி மேலும் தெரிவித்தது.
“சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் அவை சரியான முறையில் செயல்படுத்தப்படவில்லை.’
“இந்த நாட்டின் குடிமகன் என்ற முறையில் நாம் இந்த நாட்டின் அதிகாரத்துவ சமயம் இஸ்லாம் என்பது உட்பட கூட்டரசு அரசமைப்பை மதிக்க வேண்டும்,” என்றார் அவர்.