பினாங்கில் இரண்டு உயர் நிலை தெங்-களான தெங் சாங் இயாவ்-வுக்கும் டாக்டர் தெங் ஹொக் நான் -க்கும் இடையிலான உறவுகள் மிகவும் சாதாரணமானது எனக் கூறப்பட்டுள்ளது.
பினாங்கில் தாம் மட்டுமே “ஒரே கேப்டன், ஜெனரல், தளபதி” என அண்மையில் கூறியதைத் தொடர்ந்து சர்ச்சை எழுந்துள்ளது.
தெங் சாங் இயாவ் மாநில பிஎன் தலைவர் ஆவார். தெங் ஹொக் நான் மாநில கெரக்கான் தலைவர் ஆவார்.
கடந்த வாரம் சீன நாளேடு ஒன்றில் மாநில பிஎன் தலைவர் விடுத்த அறிக்கை ஒரு பிரச்னையே அல்ல என தெங் சொன்னார்.
பிஎன் -னில் அங்கம் பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றாக வேலை செய்வது தமக்கும் மாநில பிஎன் தலைவருக்கும் இடையிலான உறவுகளைக் காட்டிலும் மேலானது என அவர் சொன்னார்.
2008 தேர்தலில் எதிர்பாராத தோல்விகளைச் சந்தித்த கெரக்கானும் பிஎன் -னும் இந்த முறை வெற்றி பெறுவதை உறுதி செய்வதற்கு சிறந்த ஒத்துழைப்பு அவசியமாகும் என்றார் தெங்.
2008 தேர்தலில் கெராக்கான் பினாங்கில் தான் போட்டியிட்ட எல்லா நாடாளுமன்ற சட்டமன்றத் தொகுதிகளிலும் தோல்வி கண்டது. 11 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே அவைக்குள் நுழைந்தனர்.
13வது பொதுத் தேர்தல் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பெரும்பாலும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் தேர்தல் நிகழும் எனக் கருதப்படுகின்றது.
‘ஒரே தளபதி’
‘பினாங்கு கெரக்கானிலும் பிஎன் னிலும் ஒரே கேப்டன், ஒரே ஜெனரல், ஒரே தளபதி இருக்க முடியும்” என மாநில பிஎன் தலைவரான தெங் சாங் இயாவ் அக்டோபர் 17ம் தேதி தமது முகநூல் பக்கத்தில் எழுதியிருந்தார்.
“அந்த மனிதர் நான் தான் ! அது யாருக்காவது பிடிக்கவில்லை என்றால் நான் ஒன்றும் செய்ய முடியாது. என்னுடைய பதவியில் நான் என்னை அவ்வாறு தான் கருதுகிறேன் !”
அதற்குப் பதில் அளித்த மாநில கெரக்கான் தலைவர் “நமக்கு ஒரே ஒரு எதிரி தான். மாநில பிஎன் தலைவர் சொன்னதைப் போன்ற சிறிய விஷயங்கள் கவலைக்குரிய விஷயங்களாக மாற அனுமதிக்கக் கூடாது,” என்றார்.
அவர் இன்று மாநில பிஎன் நடவடிக்கை அறையில் நிருபர்களிடம் பேசினார்.
“அந்த எதிரியான முதலமைச்சர் லிம் குவான் எங், பினாங்கு மக்களை இழிவுபடுத்தியுள்ளார். அவர் நீண்ட கால அழிவை ஏற்படுத்தியுள்ளார். அவர் பினாங்கிற்கு பெரும் பாதகத்தை கொண்டு வந்துள்ளார்,” என அவர் மேலும் சொன்னார்.
கடந்த தேர்தலுக்கு முன்னரே அந்த இரண்டு தெங்-களுக்கும் இடையில் உறவுகள் சீராக இல்லை. மாநில கெரக்கான் தலைவரான தெங் மிகவும் எச்சரிக்கையான போக்கைப் பின்பற்றி வந்தார். ஆனால் இளம் வயதினரான மாநில பிஎன் தலைவர் தெங் ‘வேகமான’ போக்கைப் பின்பற்றுவதாக கூறப்பட்டுள்ளது..