புகழ் பெற்ற ஹாங்காங் சுயேச்சை ஊழல் எதிர்ப்பு ஆணையம் (ICAC), சபா முதலமைச்சர் மூசா அமான் சட்ட விரோதப் பணத்தை சட்டப்பூர்வமாக்கியதாகக் கூறப்படும் 40 மில்லியன் ரிங்கிட் விவகாரம் மீது விவரங்களைத் தருவதற்கு மறுத்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை மலேசியாகினி அனுப்பிய கேள்விக்கு அந்த ஆணையம் நன்றியை மட்டும் தெரிவித்துக் கொண்டுள்ளது.
“நாங்கள் தனி நபர் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கருத்துச் சொல்வதில்லை என்பதை நீங்கள் புரிந்து கொண்டு அதனை பாராட்டுவீர்கள் என நாங்கள் நம்புகிறோம்,” என அதன் முதுநிலை பத்திரிக்கை அதிகாரி சிசிலி சிக் ஒர் அறிக்கையில் கூறினார்.
ஹாங்காங்கில் வணிகரான மைக்கல் சியாவிடம் கண்டுபிடிக்கப்பட்ட 40 மில்லியன் ( அந்தப் பணம் மூசாவுக்காக எனக் கூறப்பட்டது) ரிங்கிட் தொடர்பான விசாரணையை அந்த ஆணையம் முடித்துக் கொண்டு மூசா மீது எந்தத் தவறும் இல்லை என அறிவித்துள்ளதா என மலேசியாகினி கேள்வி எழுப்பியிருந்தது.
அந்த ஹாங்காங் ஊழல் எதிர்ப்பு ஆணையம் மூசாவை விசாரித்தது என்றும் அவர் எந்தத் தவறும் செய்யவில்லை என அறிவித்துள்ளது என்றும் தகவல் வெளியிடப்பட்டிருந்தது. அந்தத் தகவலை சபா அம்னோ செயலாளர் அப்துல் ரஹ்மான் டாஹ்லான் வெளியிட்டிருந்தார்.
அந்தப் பணம் சபா அம்னோவுக்காகும் என்று சட்டத்துறைக்கு பொறுப்பான அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஜிஸ் கூறியுள்ளார். அதே வேளையில் அதில் ஊழல் அம்சம் ஏதுமில்லை என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமும் அறிவித்துள்ளது.