பிரதமர்: மலாய்க்காரர்கள் பாதுகாப்பு உணர்வுக்கு அப்பாலும் சிந்திக்க வேண்டும்

மலாய் தொழில் முனைவர்கள் வெற்றி பெறுவதற்கு அரசாங்கப் பாதுகாப்பை நம்பியிருக்கக் கூடாது என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அதற்கு மாறாக மலாய் தொழில் முனைவர்கள் தங்கள் சொந்த திறமையையில் நம்பிக்கை வைக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு கௌரவமும் மரியதையும் கிடைக்கும்.

“உரிமைகளை மட்டும் பேசிக் கொண்டிருக்க வேண்டாம். அம்னோ வழியாக அரசியல் அதிகாரத்தின் மூலம் நாம் இப்போது செய்து கொண்டிருப்பதுதான் மிக முக்கியமானது.”

“நாம் வளப்பத்தைப் பெருக்குவதற்கு என்ன செய்கிறோம்?” என நஜிப் நேற்றிரவு ஐக்கிய மலாய் பொருளாதார நடவடிக்கை மன்றத்தைத் தொடக்கி வைத்த போது கூறினார்.

மலாய் வர்த்தக சமூகத்துக்கு வழங்கப்படும் சலுகைகளை அகற்ற வேண்டிய தேவை குறித்துப்  பிரதமர் இந்த வாரத்தில் இரண்டாவது முறையாக பேசியிருக்கிறார்.

போட்டியை அதிகரிப்பதற்காக எதிர்காலத்தில் பூமிபுத்ரா கோட்டாக்கள் அகற்றப்படலாம் என நஜிப் கடந்த திங்கட்கிழமை கஸானா கருத்தாய்வுக் கூட்டம் ஒன்றில் கூறியிருந்தார்.

தமது நிர்வாகம் பூமிபுத்ரா சமூகத்துக்கு நியாயமாக நடந்து கொள்வதை அரசாங்கம் உறுதி செய்யும் என்றும் நஜிப் தமது உரையில் குறிப்பிட்டார்.

“அரசாங்கம் எம் ஆர் டி திட்டத்தை அறிவித்த போது அந்தத் திட்டத்தின் மொத்த மதிப்பில் 43 விழுக்காடு பூமிபுத்ரா நிறுவனங்களுக்கு கிடைப்பதை நாங்கள் உறுதி செய்தோம்.”

“நாங்கள் மற்றவர்களிடமிருந்து எடுத்துக் கொள்ளவில்லை. மற்றவர்களுடைய உரிமைகளை நாங்கள் எடுத்துக் கொள்ளவில்லை என்ற உணர்வை மக்கள் பெறுவதற்காக நாங்கள் புதிய திட்டங்களை உருவாக்கினோம். அதனால் நியாயமாக விநியோகம் செய்ய முடிந்தது.”

அரசாங்கத்தை ஆதரியுங்கள்

மலாய் தொழில் முனைவர்கள் அரசாங்கத்துடன் அணுக்கமான ஒத்துழைப்பை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் நஜிப் வலியுறுத்தினார். ஏனெனில் தமது நிர்வாகத்தின் தலைவிதியுடன் அவர்களுடைய எதிர்காலம் பின்னி பிணைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

“நாம் ஒருவரை ஒருவர் சார்ந்திருக்க விரும்பினால் நீங்கள் நடப்பு அரசாங்கத்தை நம்பலாம்”, என்றார் அவர்.

ஐக்கிய மலாய் பொருளாதார நடவடிக்கை மன்றம் அமைக்கப்படுவது, மலாய்க்காரர்களிடையே மாற்றத்தைக் கொண்டு வரவும் அவர்களுடய ஆற்றலை மேம்படுத்தவும் அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகளில் ஒரு பகுதி என்றும் நஜிப் குறிப்பிட்டார்.

TAGS: