நாட்டின் பொதுப் போக்குவரத்து முறையை முழுமையாக மறுசீரமைப்புச் செய்வதற்கு முன்மொழியப்பட்டுள்ள பெருந்திட்டம் மீது தங்கள் கருத்துக்களையும் மனக்குறைகளையும் யோசனைகளையும் தெரிவிப்பதற்கு வருமாறு பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அன்றாடம் தாங்கள் எதிர்நோக்கும் போக்குவரத்துப் பிரச்னைகளைப் பற்றி ‘சாலையில் நடந்து செல்லும் சாதாரண மனிதரும்’ பேச வேண்டிய நேரம் வந்து விட்டதாக மலேசியாவில் பொதுப் போக்குவரத்து மீதான பணிக் குழுவின் (KKPAM) பேச்சாளர் பி சிவா இன்று கோலாலம்பூரில் நிருபர்களிடம் சொன்னார்.
நவம்பர் 3ம் தேதி காலை மணி 8.40 முதல் மாலை மணி 4.00 வரை பெட்டாலிங் ஜெயா சமூக நூலகத்தில் நடத்தப்படும் பொதுப் போக்குவரத்து மீதான தேசியக் கருத்தரங்கில் பொது மக்கள் பங்கு கொண்டு தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க வாய்ப்புக் கிடைக்கும் என அவர் தெரிவித்தார்.
அந்த நிகழ்வில் பொது மக்கள் அரசாங்க அதிகாரிகளுடன் பொதுப் போக்குவரத்துப் பிரச்னைகள் மீது கலந்துரையாடலாம் என்றும் சிவா கூறினார்.
அந்த நிகழ்வின் கருப்பொருள் ” தனியார் போக்குவரத்திலிருந்து பொதுப் போக்குவரத்துக்கு மாறுவோம்” என்பதாகும். மலேசியாவில் பொதுப் போக்குவரத்து முறையை முழுமையாக மறுசீரமைப்புச் செய்ய அரசாங்கம் வழங்கியுள்ள புதிய பெருந்திட்டம் மீது மக்களுக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் நிகழ்வதைக் காணவும் பணிக்குழு விரும்புகிறது.
நெடுஞ்சாலைகளை கட்டுவது தனியார் வாகனங்களை மேம்படுத்துவது ஆகியவற்றை விடப் பொதுப் போக்குவரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதை உறுதி செய்வது அந்தக் கருத்தரங்கின் முக்கிய அம்சமாகும்.
பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றம், நகர, நாட்டுப்புற திட்டத் துறை, Spad என்ற நில பொதுப் போக்குவரத்து ஆணையம் ஆகியவை அந்த நிகழ்வில் கலந்து கொள்வதை உறுதி செய்துள்ளதாகவும் சிவா தெரிவித்தார்.