இஸ்லாமியக் கட்சியான பாஸ் பினாங்கில்தான் தோற்றம் கண்டது என்பதைப் பலர் அறியமாட்டார்கள். அதனால்தான் அக்கட்சி அதன் 60ஆம் ஆண்டுவிழாவைக் கொண்டாட கப்பாளா பத்தாசைத் தேர்ந்தெடுத்துள்ளது.
வரலாற்றுச் சிறப்புக் கொண்ட இந்த விழாவின்வழி பினாங்கில் தன் இருப்பை வலுவான முறையில் புலப்படுத்திக்கொள்ளவும் அக்கட்சி எண்ணியுள்ளது என்கிறார் பாரிட் புந்தார் எம்பி முஜாஹிட் யூசுப் ராவா. இப்போதைக்கு அக்கட்சிக்கு அம்மாநிலத்தில் இரண்டு இடங்கள் மட்டுமே உண்டு. ஒரு நாடாளுமன்ற இடம், ஒரு சட்டமன்ற இடம்-பெர்மாத்தாங் பாசிர்.
அதனால், எதிர்வரும் தேர்தலில் கூடுதல் இடங்களில் போட்டியிட அக்கட்சி விரும்புகிறதா என்றால் அதைப் பற்றி எதுவும் தெரிவிக்க முஜாஹிட் தயாராக இல்லை.
ஆனால், எல்லா மலேசியரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் தன்னை “உருமாற்றும்” நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அக்கட்சி, அதனால் எழும் விவகாரங்களையும் சவால்களையும் எதிர்கொள்வதில் கவனம் செலுத்தும் என்றார்.
“பினாங்கு மக்கள் பாஸின் வரலாற்றையும் அது அம்மாநிலத்தில் தோன்றிய விதத்தையும் தெரிந்து வைத்திருப்பது முக்கியம்”, என்று பாஸ் மத்திய செயற்குழு உறுப்பினருமான முஜாஹிட் கூறினார்.
இப்போது கிளந்தானை ஆட்சி செய்துவரும் பாஸ்-பேராக்கையும் 2009வரை சிறிது காலம் ஆண்டது- நாட்டின் பன்முகத்தன்மைக்கு ஏற்பவும் உலக இஸ்லாமியத் தளத்துக்கு ஏற்பவும் தன்னை மாற்றிக்கொண்டு வந்துள்ளது என்றாரவர்.
கட்சியின் ஆண்டுவிழாக் கொண்டாங்கள் இன்று மாலை தொடங்கும்.நாளை, கட்சித் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங், 2-நாள் கட்சி மாநாட்டைத் தொடக்கி வைப்பார்.
அம்மாநாட்டில், கட்சி உயர்த்தலைவர்கள் எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கான கட்சியின் வியூகங்களை விளக்கும் அறிக்கைகளைத் தாக்கல் செய்வார்கள்.
அம்மாநாட்டில், பாஸ் ஆட்சி செய்யும் கிளந்தானில் ஷியாரியா குற்றவியல் சட்டம் அல்லது ஹூடூட்டை நடைமுறைப்படுத்தும் மாநில அரசின் திட்டம் அண்மையில் சர்ச்சையை உண்டாக்கியது குறித்தும் பேசப்படுமா என்று வினவியதற்கு அது பெரும்பாலும் விவாதிக்கப்படாது என்றார்.
அப்படியே அது பற்றிப் பேசப்பட்டாலும், அண்மைய நிலவரங்கள் பற்றிய ஒரு விளக்கமளிப்பாக மட்டுமே அது இருக்கும்.
விழா, பல்வகை கொண்டாட்டங்களுடனும் கட்சி வரலாற்றை எடுத்தியம்பும் கண்காட்சியுடனும் தொடங்கும். ஞாயிற்றுக்கிழமை, கிளந்தான் மந்திரி புசாரும் பாஸின் ஆன்மிக ஆலோசகருமான நிக் அசீஸ் நிக் மாட் விழாவை முடித்து வைப்பார்.
பக்காத்தான் பெருந் தலைவர்கள், டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங், பிகேஆர் ஆலோசகரும் மாற்றரசுக் கட்சித் தலைவருமான அன்வார் இப்ராகிம் போன்றோரும் சனிக்கிழமை கொண்டாட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றுவார்கள்.
பாஸ், பின்வாசல் வழியே ஹூடுட்டைக் கொண்டுவர முனையாது
அண்மைய கூட்டமொன்றில் பக்காத்தான் தலைவர்கள், ஹூடுட் சட்டம் தொடர்பில் பாஸின் நிலைப்பாட்டைத் தாங்கள் மதிப்பதாகக் கூறியது தமக்கு மனநிறைவைத் தந்துள்ளது என்று முஜாஹிட் கூறினார்.
இஸ்லாமிய சட்டத்தைச் சட்டப்பூர்வமான முறையில் கொண்டு வரவேண்டும் என்பதே பாஸின் நோக்கமாக எப்போதும் இருந்து வந்துள்ளது. அது “குறுக்குவழியில்” மற்றவர்கள்மீது இஸ்லாமிய சட்டத்தைத் திணிக்க முற்படாது.
கட்சி இஸ்லாமிய சட்டம் கொண்டுவருவது பற்றி முறையாக விவாதிக்க முற்படுமே தவிர, அவ்விவகாரத்தை அரசியலாக்கி மக்களைக் குழப்பாது.
“அச்சட்டத்தின் கொள்கை, தத்துவம் பற்றி அறிவார்ந்த முறையில் விவாதிப்போமே தவிர, அதை வைத்து அரசியல் சர்ச்சையில் ஈடுபட மாட்டோம்”, என்று முஜாஹிட் தெரிவித்தார்.
“பக்காத்தானின் பொதுக்கொள்கையை விவரிக்கும் புக்கு ஜிங்காவில் அது பற்றிக் குறிப்பிடப்படவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஹூடுட் ஒரு மாநில நிர்வாகம் சம்பந்தப்பட்ட விசயம். அந்த ஆவணம் கூட்டரசு நிலையிலான விவகாரங்கள்மீது மட்டுமே கவனம் செலுத்துகிறது”, என்றாரவர்.