பத்துமலை குகைக் கோயிலுக்கு அருகில் 29 மாடிகளை கொண்ட ஆடம்பர அடுக்கு மாடி வீட்டுத் தொகுதியொன்று கட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை 10 மணியளவில் பத்துமலை முருகன் கோயில் வாளாகத்தினுள் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் 300 பேர் மட்டுமே கலந்துகொண்டனர்.
29 மாடிகளை கொண்ட ஆடம்பர அடுக்கு மாடி வீட்டுத் தொகுதி கட்டுவதற்கான அனுமதியை புதிப்பித்து கொடுத்த பக்காத்தான் தலைமையிலான சிலாங்கூர் அரசாங்கத்திற்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்க இலட்சக்கணக்கான மக்கள் திரண்டு வருவார்கள் என மாரியம்மன் தேவஸ்தான தலைவர் நடராஜா முன்னர் கூறியிருந்த போதிலும் இன்று காலை வெறும் 300 பேர் மட்டுமே கலந்துகொண்டனர். அதில் பெரும்பாலும் மஇகா-வைச் சேர்ந்த உறுப்பினர்களே அதிகமாக காணப்பட்டனர்.
இன்றைய ஆர்ப்பாட்டத்தில் பேசிய தேவஸ்தான தலைவர் நடராஜா, கட்டுமானப் பணியை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ள சிலாங்கூர் அரசாங்கம் அதனை நிரந்திரமாக தடைசெய்யவேண்டும் என வலியுறுத்தினார். அப்போது சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் சேவியர் ஜெயக்குமாரையும் சாட அவர் தவறவில்லை.
நடராஜா பேசிய பின்னர், மஇகா முன்னாள் தலைவரும் முன்னாள் பொதுப் பணித்துறை அமைச்சருமான சாமிவேலு கலந்துகொண்டு பேசினார்.
இவ்வார்ப்பாட்டத்தின்போது, கூட்டரசுப் பிரதேச துணை அமைச்சர் எம். சரவணன், வெளியுறவுத் துறை துணையமைச்சர் செனட்டர் கோகிலன் பிள்ளை, மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் டி. மோகன், முருகேசன் என மஇகா தலைவர்களின் பட்டாளமே அங்கு கூடியிருந்தது. எனினும் இவ்வார்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்த மஇகா தலைவர் பழனிவேல் அங்கு சமூகமளிக்கவில்லை.
கோயில் அருகில் 29 மாடிகளை கொண்ட ஆடம்பர அடுக்கு மாடி வீட்டுத் தொகுதியை கட்டுவதற்கு பாரிசான் தலைமையிலான அப்போதைய சிலாங்கூர் அரசாங்கமே 2007-ல் அனுமதி வழங்கியிருந்து. எனினும் இவ்வார்ப்பாட்டத்தின்போது அவ்விவகாரத்திற்கு எந்தவிதமான எதிர்ப்புகளும் தெரிவிக்கப்படவில்லை என்பதுடன் அங்கு குழுமியிருந்த மஇகா இளைஞர் பகுதியினர் சேவியர் ஜெயகுமார் மற்றும் பக்கத்தான் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை வசைபாடி கோசங்களை எழுப்பினர்.
மஇகா இளைஞர் பகுதி என பொறிக்கப்பட்டிருந்த பச்சை நிற சட்டைகளை அணிந்திருந்த அவர்களின் எதிர்ப்பு நடவடிக்கையினால் பத்துமலை கோயிலை காக்க ஒன்றுகூட்டப்பட்ட கூட்டம் கடைசியில் பக்கத்தான் எதிர்ப்பு கூட்டமாக மாறியது.
அத்துடன், கட்டுமானத்திற்கு அனுமதி கொடுத்த சிலாங்கூர் மாநில அரசாங்கத்தை கடுமையாக கண்டிப்பதாக கூறி எதிர்ப்பு பதாகைகளை வைத்துக்கொண்டு கோசமிட்டவர்கள், தமிழகத்திலிருந்து இங்கு வந்து பணிபுரியும் கூலித் தொழிலாளிகள் என்பது செம்பருத்தி இணையத்தளத்திற்கு கிடைக்கப்பெற்ற புகைப்படங்களின் மூலம் தெரியவந்துள்ளது.
இதேவேளை, இக்கூட்டத்தின்போது தேவஸ்தான தலைவர் நடராஜவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க முற்பட்ட சுமார் 40 வயது மதிக்கத்தக்க இண்ட்ராப் போராட்டவாதி ஒருவரை அங்கிருந்த ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் தாக்க முற்பட்டனர். எனினும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ரேலா படையினரால் அது தடுக்கப்பட்டது.
ஊனமுற்றவரான அந்த இண்ட்ராப் போராட்டவாதி உடலால் ஊனமுற்றாலும், மனதால் ஊனமடையவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் ஆர்பாட்டம் நடைபெற்ற பகுதிக்கு அருகில் சென்று தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.
அத்துடன், கூட்டத்தினரிடையே இலவசமாக விநியோகிப்பட்டிருந்த தேவஸ்தான தலைவர் நடராஜாவின் அறிக்கையை தலைப்புச் செய்தியாக கொண்ட ஒரு தமிழ் பத்திரிக்கையும் அவரால் கிழித்தெறியப்பட்டது. அதன்பின்னர் மஇகா ஆதரவாளர் என நம்பப்படும் ஒருவர் அந்த இண்ட்ராப் போராட்டவாதியிடம் வாக்குவாதப்பட்டுக்கொண்டதை அடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது.
1 மணி நேரம் வரை நீடித்த இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் முடிவில் கலந்துகொண்ட அனைவருக்கும் கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு அருகில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட கூடாரத்தினுள் மதிய உணவு வழங்கப்பட்டது.