பக்காத்தான் அரசு மீதும், எங்கள் நேர்மை மீதும் நம்பிக்கை வைத்துள்ள மலேசிய இந்தியர்கள் அனைவருக்கும் என் நன்றியை, பக்காத்தான் சிலாங்கூர் மாநில அரசின் சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
குறிப்பாக, ம.இ.கா கிளை நிலை நிர்வாக உறுப்பினர்களுக்கு, ம.இ.கா வின் தேசிய தலைவர் பழனிவேலே ஆணையிட்டும், பத்துமலையில் ஆலயப் பாதுகாப்பு என்ற போர்வையில் இலட்சம் பேரைக் கூட்டும் கோலாலம்பூர் மகா மாரியம்மன் தேவஸ்தானத் தலைவர் ஆர். நடராஜா மற்றும் பழனிவேல் முயற்சிக்கு, மக்கள் மரண அடி கொடுத்துள்ளார்கள்.
கடந்த தேர்தலில் பாடாங் ஜாவா, ரிம்பா ஜெயா மகாமாரியம்மன் ஆலயம் சிலாங்கூரில் அரசியல் மாற்றத்திற்கு இட்டுச் சென்றது. அதனால் இம்முறை பத்துமலை திருமுருகன் ஆலயத்துக்கு ஆபத்து என்ற போலி சங்கை ஊதி மக்களை ஏமாற்றி விடலாம் என்று மணப்பால் குடித்த ம.இ.கா தலைவர்களுக்கும், மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் நடராஜாவுக்கும் மக்கள் விடும் எச்சரிக்கையாக இது அமைந்து விட்டது.
மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு மீண்டும் தலை வணங்குகிறேன்.
நீதிக்காக, எங்களுக்கு துணை நின்ற எல்லாப் பத்திரிக்கையாளர்களுக்கும் நன்றி.
இது, இந்தியச் சமுதாயத்துக்கு இன்னும் சிறந்த முறையில் சேவை செய்ய எங்களுக்கு ஊக்கமளித்துள்ளது.
எந்தப் பிரச்சனைகளானாலும் அது குறித்து விவாதிக்க, ஆலோசனை வழங்க தீர்வுக்கான எங்கள் கதவுகள் என்றும் திறந்தே உள்ளன.
ஆனால், கடந்த திங்கள்கிழமை, ம.இ.கா வின் இன்றைய தேசியத்தலைவர் பழனிவேலுவுடன் சேர்ந்து கோலாலம்பூர் மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் நடராஜா பத்துமலை முருகன் ஆலயப் பாதுகாப்பு என்ற போர்வையில் அரசியல் அறிக்கை விட்டார்.
அவரின் பத்திரிக்கை அறிக்கை பக்காத்தான் மாநில அரசு பத்துமலைக்கு ஏதோ பெரிய பாதகத்தை, அநீதியை இழைத்துள்ளதைப் போன்று இருந்தது. சிலாங்கூர் மாநிலத்தின் ஆட்சி பக்காத்தான் கையில் உள்ளபோது. பத்துமலைக்கு ஏதேனும் பிரச்சனை என்றால், எந்த பொறுபுள்ள தலைவரும், முதலில் நாடவேண்டியது மாநில அரசு பிரநிதிகளை அல்லது நகராட்சி மன்ற உறுப்பினர்களை.
ஆனால், மாநில அரசுக்கு ஒரு புகார் கடிதம் கூடக் கொடுக்காதவர், பழனிவேலுடன் பத்திரிக்கை அறிக்கை விடுவதின் நோக்கம் என்ன?
உண்மைகளை மறைத்து பக்காத்தான் அரசைச் சாட வேண்டிய அவசியம் என்ன என்பதனை மக்களே தீர்மானித்துக் கொள்ளலாம்.
நான் சொல்லாத ஒன்றை சொல்லியதாகத் திரித்துச் செய்தி வெளியிட்டுள்ள ஸ்டார் ஆங்கில நாளேட்டைக் கண்டிக்கிறேன்.
அதே வேளையில் அதை கருவாகக் கொண்டு இன, மத துவேச ரீதியில் அறிக்கை விட்டுள்ள சரவணனுக்கு மக்கள் இன்று காலையில் தக்க முறையில் பதில் தந்துள்ளனர்.
நாங்கள் எங்கள் கடமையை மக்களுக்கும், தெய்வத்திற்கும் பயந்து செய்வதை மக்கள் உணர்ந்துள்ளார்கள்.
அவர்களிடம் இன, மத பிற்போக்குவாதம் எடுபடாது என்பதனை உணர்ந்து கொள்ளுங்கள்.
மலையடிவாரத்தில் 29 மாடி உயர்ந்த கட்டடம் எழுப்பும் திட்டத்திற்க்கு அங்கீகாரம் வழங்கிய அப்போதைய நகராட்சி மன்ற உறுப்பினர் கோகிலன் பிள்ளை அன்று அவர் எதை அங்கீகரித்தார் என்பதனைக்கூட அறியாமல் பினாத்துகிறார். உயர் பதவியிலிருக்கும் கோகிலனுக்கு, எதை அங்கீகரித்தார், அதன்பின் அந்த கோப்பு எங்கே போகும், எப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது போன்ற விசயங்களில் நான் பாடம் நடத்த முடியாது. அவருக்கு அதையெல்லாம் அறிந்துகொள்ள அன்று வாய்பில்லை. அவர்கள் அன்று வெரும் தலையாட்டி பொம்மைகள். அதை எல்லாம் கற்க, ஆர்வமிருந்தால் எங்கள் பக்காத்தான் நகராட்சிமன்ற உறுப்பினர்களிடம் கேட்டு தெரிந்துக் கொள்ளட்டும்.
ஆக, பத்துமலையை காக்கும் எங்கள் கடப்பாட்டிலிருந்து நாங்கள் பின் வாங்க மாட்டோம். கோலாலம்பூர் மகா மாரியம்மன் தேவஸ்தானத் தலைவர் நடராஜா இனியும் மாநில அரசுக்குக் காலக்கெடு வழங்குவதையும், நிபந்தனை விதிப்பதையும் கைவிட்டு முறையான பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என்று டாக்டர் சேவியர் ஜெயகுமார் நேற்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.