“பத்துமலைக் கோவிலுக்கு அருகில் சர்ச்சைக்குரிய ஆடம்பர அடுக்கு மாடி வீட்டுத் திட்டத்துக்கு அங்கீகாரம் வழங்கியது பிஎன் ஆகும். பக்காத்தான் ராக்யாட் அல்ல. அதனை நிரூபிப்பதற்கு தேவையான ஆதாரங்கள் மாநில அரசாங்கத்திடம் இப்போது உள்ளன.”
அந்த ஆடம்பர அடுக்கு மாடி வீட்டுத் தொகுதி கட்டப்படவிருக்கும் பகுதிக்கு வருகை அளித்த ஊராட்சித் துறைக்குப் பொறுப்பான சிலாங்கூர் மாநில ஆட்சி மன்ற உறுப்பினர் ரோனி லியூ அந்தத் தகவலை வெளியிட்டார்.
அவர் தம்முடன் 2007ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் தேதி பிஎன் காலத்தில் செலாயாங் நகராட்சி மன்றம் அங்கீகரித்த கட்டுமானத் திட்டங்களை கொண்டு வந்திருந்தார்.
“அந்த மேம்பாடு 29 மாடிகளைக் கொண்ட சர்வீஸ் (service) அடுக்கு மாடி வீட்டுத் தொகுதி 25 மாடி சர்வீஸ் (service) அடுக்கு மாடி வீட்டுத் தொகுதி என மிகவும் தெளிவாகக் கூறுகின்றது. அவற்றுக்கு முன்பு ஏற்கனவே கடை வீடுகள் கட்டப்பட்டுள்ளன.”
“அந்த அங்கீகாரத்தை பிஎன் வழங்கியிருப்பதால் பக்காத்தான் மீது அந்தக் கோவில் குழுத் தலைவர் உட்பட யாரும் பக்காத்தான் ராயாட் மீது பழி போடக் கூடாது. அதில் எல்லாம் உள்ளது. முத்திரை குத்தப்பட்டுள்ளது. கையெழுத்திடப்பட்டுள்ளது. எல்லாம் உள்ளது,” என்றார் அவர்.
சுற்றுலாத் தலமாக திகழும் சுண்ணாம்புக் கல் மலையின் தோற்றத்தை மறைக்கும் என நேற்று பத்துமலை ஸ்ரீ சுப்ரமணிய ஆலய குழு உறுப்பினர்கள் புகார் செய்த டவர் கட்டிடத் தொகுதியும் அந்தத் திட்டங்களில் காணப்படுகின்றது.
அந்தத் திட்டத்துக்கு பக்காத்தான் அரசாங்கமே காரணம் என முன்னாள் செலாயாங் நகராட்சி மன்ற உறுப்பினரும் நடப்பு வெளியுறவுத் துணை அமைச்சருமான ஏ கோகிலன் பிள்ளை நேற்று பழி சுமத்தினார்.
2007ம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட திட்டம் வெறும் ‘திட்ட அனுமதியே’ என்றும் அதில் மாடிகள் எண்ணிக்கை குறிப்பிடப்படவில்லை என்றும் அவர் கூறிக் கொண்டிருந்தார்.