கோபாலா: கொண்டோ விவகாரத்தில் பக்காத்தானின் ‘இந்து-எதிர்ப்பு’முகம் தெரிகிறது

UPDATED 5.43PM இந்துக்கள் புனிதமாகப் போற்றும் பத்துமலை ஆலயத்துக்கு அருகில் 29-மாடி கொண்டோமினியம் கட்டும் விவகாரத்தில் பக்காத்தான் ரக்யாட்டின் “இந்து-எதிர்ப்பு” முகம் வெளிப்படுவதாகக் கூறுகிறார் பாடாங் செராய் எம்பி என்.கோபாலகிருஷ்ணன்.

“பத்துமலை ஆலய விவகாரத்தை நினைக்கும்போது கவலை மேலிடுகிறது. அது இந்திய சமூகத்தின் இன்னுமொரு  அடையாளச் சின்னத்தை அழிக்க சில தரப்பினர் மேற்கொண்டுள்ள சதி என்றே எனக்குப் படுகிறது.

“ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால், பக்காத்தான் ரக்யாட்டில் இந்துகளை எதிர்க்கும் சில தலைவர்கள் உள்ளனர். இந்தியர்களைப் பிளவுபடுத்தி அடிமைகளாக்குவதே அவர்களின் முக்கிய திட்டமாகும்”, என்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர் கூட்டமொன்றில் அவர் கூறினார்.

சிலாங்கூர் ஆட்சிக்குழுவில் இந்து தலைவர் எவருமில்லை என்று குறிப்பிட்ட கோபாலகிருஷ்ணன், கொண்டோ விவகாரம் கம்போங் புவா பாலா விவகாரம் போன்றது என்றார்.இரண்டுமே இந்திய மலேசியர்கள் ‘புறக்கணிக்கப்படுவதற்கு’எடுத்துக்காட்டுகள்.

“இந்து-எதிர்ப்பு” பற்றி விவரிக்குமாறு கேட்டதற்கு, “(மாற்றரசுக்கட்சித் தலைவர்) அன்வார் இப்ராகிம் இந்து-எதிர்ப்பாளர், சில தலைவர்கள் (சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர்) டாக்டர் சேவியர் (ஜெயகுமார்) போன்றோரும் இந்து-எதிர்ப்பாளர்கள்தான்”, என்றார்.

1998-இல், துணைப் பிரதமராக இருந்தபோது இந்து ஆலயங்களில் மணியோசை கேட்காதபடி செய்யப்போவதாகக் கூறியவர்தான் அன்வார் என்றவர் மேலும் விவரித்தார்.

“அப்படிச் சொன்னதாகக் கூறிய ஒருவர்மீது அவர் வழக்கு தொடுத்திருப்பது தெரியும். ஆனால், அதற்கு நான் சாட்சிகூற முடியும்”, என்றார்.

1998-இல், பினாங்கு கம்போங் ராவாவில் இந்து ஆலயமொன்றில் வழிபாடு செய்தவர்களுக்கும் அருகில் ஒரு பள்ளிவாசலில் தொழுகை செய்தவர்களுக்குமிடையில் மோதல்கள் மூண்டபோது அன்வார் நடுவர் பணி ஆற்றினார்.

2008 தேர்தலில் மஇகா தலைவர் சாமிவேலு, அன்வார் அவ்வாறு கூறியதைத் தம் தேர்தல் பரப்புரைகளில் எடுத்துச் சொல்லி வந்தார். ஆனால், அன்வார் இனச்சண்டைகளைத் தூண்டிவிட்டதாகக் கூறப்படுவதை மறுத்து அவ்விவகாரத்தில் தாம் சமரசப் பணி செய்ததை விளக்கினார்.

2007-இல், கொண்டோமினியம் கட்ட அனுமதி கொடுத்தது பிஎன் அரசுதான் என்பதை ஏற்றுக்கொண்ட கோபாலகிருஷ்ணன், இருந்தாலும் மக்கள் பிஎன்னுக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்றார். அப்போதுதான் செய்த தவறுகளை அதனால் திருத்திக்கொள்ள முடியும்.

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் செய்த தவறுகளுக்காக ஏற்கனவே மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டிருப்பதாக அவர் கூறினார்.