வரும் 27ம் தேதி தொடங்கும் அம்னோ ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் ” விரும்பத்தகாத சக்திகள்” நுழைவதையத் தடுக்க அம்னோ புதிய முறை ஒன்றைப் பயன்படுத்தும்.
கோலாலம்பூரில் புத்ரா உலக வாணிக வளாகத்தில் உள்ள மாநாட்டு மண்டபங்களுக்குள் அங்கீகாரம் பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கும் “போட்டோ, கைவிரல் ரேகை அடையாளத்தை” அந்த முறை கொண்டிருக்கும் என அம்னோ நிர்வாகச் செயலாளர் ராவ்ப் யூசோப் கூறினார்.
“அந்நிய ஊடகங்கள் மட்டுமின்றி அந்நியச் சக்திகளும் கூட உள்ளே நுழைவதற்கு முயற்சி செய்யக் கூடும். ஆகவே அவர்கள் நுழைவதை நாங்கள் கட்டுப்படுத்த வேண்டும்,” என அவர் இன்று ஊடகங்களுக்கு விளக்கமளித்த போது கூறினார்.
“அது அம்னோ ஆண்டுப் பொதுக் கூட்டம். அம்னோவுக்காக அம்னோ விவகாரங்களை அம்னோ கட்டுக்குள் விவாதிப்பதற்காக நடத்தப்படும் கூட்டம். நாங்கள் சதி நாச வேலைகளை விரும்பவில்லை.”
புதிய முறையின் கீழ் ஊடகவியலாளர்களும் எல்லாப் பேராளர்களும் சோதனை செய்யப்படுவதற்காக தங்களது மை கார்டுகளையும் கொண்டு வர வேண்டும்.
நுழைவதற்கு அங்கீகாரம் பெற்றவர்களுடைய மை கார்டு எண்களும் படங்களும் அந்த முறைக்குள் பதிவு செய்யப்பட்டிருக்கும். அங்கீகாரம் கொடுக்கப்படாதவர்களுக்கு நுழைவு அனுமதிகள் கொடுக்கப்படாமல் இருப்பதை அது உறுதி செய்யும்.
மண்டபத்துக்குள்ளிருந்து நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்புக்கள் அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் ராவ்ப் சொன்னார்.
“மண்டபத்துக்குள் பல விஷயங்கள் விவாதிக்கப்படுகின்றன. வெளியிடுவதற்கு முன்னர் அவற்றை வடி கட்ட வேண்டும்.”
“ஏற்கனவே நாங்கள் நேரடியான ஒளிபரப்புக்களை அனுமதித்தோம். அதனால் பல சர்ச்சைகள் எழுந்தன,” என்றார் அவர்.
‘செய்திகள் நியாயமாக இருக்க வேண்டும்’
அம்னோ மின்னியல் ஊடகங்கள் உட்பட எல்லா ஊடகங்களுடனும் ஒத்துழைக்க உறுதி பூண்டுள்ளது, ஆனால் “செய்திகள் நியாயமாக இருக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.
செய்தி இணையத் தளங்களைச் சேர்ந்த நிருபர்களுக்கு 20 நாற்காலிகளைக் கொண்ட ஒர் அறை ஒதுக்கப்படும். அவற்றை அந்த நிருபர்கள் தங்களுக்குள் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
மலேசியாகினி உட்பட பல இணைய ஊடகப் பேராளர்கள் கடந்த கால அம்னோ ஆண்டுப் பொதுக் கூட்டங்களில் செய்திகளைச் சேகரிப்பதிலிருந்து தடுக்கப்பட்டனர்.
எதிர்வரும் ஆண்டுப் பொதுக் கூட்டத்துக்கு முன்னதாக நவம்பர் 24ம் தேதி தகவல் கருத்தரங்கும் நவம்பர் 26,27ம் தேதிகளில் அனைத்துலகக் கருத்தரங்கு ஒன்றும் நடத்தப்படும்.
“இந்த ஆண்டு நமது ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் 27க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பேராளர்கள் கலந்து கொள்வர். அது நமது தலைவர்களுக்குக் கொடுக்கப்படும் அங்கீகாரத்தைக் காட்டுகின்றது,” என்றார் ராவ்ப்.
நவம்பர் 27ம் தேதி தலைவர் உரை நிகழ்த்தும் போது நிருபர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ( closed-door affair.)
அம்னோ மகளிர், இளைஞர், புத்ரி பிரிவுகள் தங்கள் கூட்டங்களை நவம்பர் 28ம் தேதி ஒரே நேரத்தில் நடத்தும்.
முறையான ஆண்டுப் பொதுக் கூட்டம் நவம்பர் 29 முதல் டிசம்பர் 1ம் தேதி வரை நிகழும்