கோகிலன்: “பத்துமலை கொண்டோ விவகாரத்தில் எனக்குச் சம்பந்தம் இல்லை”

வெளியுறவு துணை அமைச்சர் ஏ.கோகிலன் பிள்ளை, தாம் நகராட்சி மன்ற உறுப்பினராக இருந்தபோதுதான் பத்துமலை ஆலயத்துக்கு அருகில் 29-மாடி கொண்டொமினியம் கட்ட அனுமதி கொடுக்கப்பட்டது என்றாலும் அனுமதி கொடுப்பதில் தாம் சம்பந்தப்படவில்லை என்றார்.

அவருக்குத் தொடர்புண்டு என்று சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் ரோனி லியு கூறியுள்ளதை மறுத்த கோகிலன், ஒப்புதல் கொடுத்தது செலாயாங் நகராட்சி மன்றத்தின் ஓரிட சேவை மையம்தான்(ஓஎஸ்சி) என்றார்.

“நான் ஒரு கவுன்சிலராக மட்டுமே இருந்தேன். மன்றத்தில் உள்ள ஓஎஸ்சி-தான் அனுமதி கொடுத்தது. எனக்கு அதில் சம்பந்தமில்லை. குற்றம் சாட்டும் அவர் (லியு) அதற்கு ஆதாரம் காட்ட வேண்டும்…

“உண்மைகள் திரித்துக்கூறப்பட்டுள்ளன. நான் ஒப்புதல் கொடுத்தேன் என்பதைக் காட்ட எதுவுமில்லை….. நான் கோப்புகளை நன்கு ஆராய்ந்து பார்த்தேன். எனக்கு அதில் தொடர்பில்லை”, என்று கோகிலன் மலேசியாகினியிடம் நேற்றுத் தெரிவித்தார்.

கோகிலன் 1997-இலிருந்து 2008வரை நகராட்சி மன்ற உறுப்பினராக இருந்தார்.

கடந்த புதன்கிழமை லியு, கொண்டோ கட்ட அனுமதி வழங்கிய குழுவில் கோகிலனும் ஹுலு சிலாங்கூர் எம்பி பி.கமலநாதனும் இடம்பெற்றிருப்பதாகக் கூறினார்.

அதை மறுத்த கமலநாதன், போலீசில் அது பற்றிப் புகார் செய்தார். கோகிலனும் நேற்றிரவு பத்துமலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

கொண்டோவுக்கு ஒப்புதல் கொடுத்ததில் தம்மையும் கலலநாதனையும் தொடர்புப்படுத்துவதைக் கண்டித்த கோகிலன் அது “ஆதாரமற்ற” குற்றச்சாட்டு என்றார்.

“உண்மையில் அனுமதி கொடுத்தது யார் என்பதைப் பாருங்கள். ஊகம் வேண்டாம். இது (குற்றச்சாட்டு) ஏதோ அரசியல் நோக்கம் கொண்டதுபோல் தெரிகிறது”.

பிஎன் ஆட்சியின்போது ஒப்புதல் கொடுக்கப்பட்டதை ஒப்புக்கொண்ட கோகிலன் -கடந்த வெள்ளிக்கிழமை இதை மறுத்தார்- அதன்பின் பக்காத்தான் அரசால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று வினவினார்.

“அவர்கள் ஏன் கண்காணிக்கவில்லை. அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?”.