பத்துமலை ‘கொண்டோ’ பணிக்குழு அடுத்த வாரம் அறிவிக்கப்படும்

புகழ் பெற்ற பத்துமலை கோவிலை சுற்றிலும் மேற்கொள்ளப்படுகின்ற மேம்பாடுகளை ஆய்வு செய்வதற்கான சுயேச்சைப் பணிக் குழு விவரங்கள் அடுத்த வாரம் அறிவிக்கப்படும்.

சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிம் அந்தத் தகவலை வெளியிட்டார்.

அந்தக் குழுவுக்கு ஐந்து முதல் ஏழு உறுப்பினர்கள் வரையில் நியமிப்பது என மாநில ஆட்சி மன்றம் முடிவு செய்துள்ளதாகவும் அவர் சொன்னார்.

அவர் நேற்று மாநில ஆட்சி மன்றக் கூட்டத்துக்கு தலைமை தாங்கிய பின்னர் நிருபர்களிடம் பேசினார்.

“அவர்களது பெயர்கள் இன்னும் ரகசியமானவை. ஏனெனில் பொருத்தமானவர்கள் என நாங்கள் கருதுகின்றவர்களை நான் அணுகி ஒப்புதல் பெற வேண்டும்,” என அவர் சொன்னார்.

பத்துமலைக் கோவிலுக்கு அருகில் ஆடம்பர அடுக்கு மாடி வீட்டுத் தொகுதி கட்டப்பட்டுவதற்கு கோவில் குழு ஆட்சேபம் தெரிவித்ததைத் தொடர்ந்து பணிக்குழு குறித்த தகவல் அறிவிக்கப்பட்டது.

அந்தக் குழுவில் பிரபலமான வழக்குரைஞர்களும் திட்ட வல்லுநர்களும், கட்டுமானத் தொழில் பிரமுகர்களும் இடம் பெறுவர் என கடந்த செவ்வாய்க் கிழமை காலித் அறிவித்திருந்தார்.

மாநில அரசு உத்துசான் மீது வழக்குப் போடும்

இதனிடையே தமக்கு எதிராக அவதூறான கருத்துக்களை வெளியிட்டதற்காக அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியா மீது மாநில அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் அந்த நிருபர்கள் சந்திப்பில் அறிவித்தார்.

“மந்திரி புசாருடைய நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் பொய்யான தீய நோக்கம் கொண்ட கட்டுரை ஒன்றை வெளியிட்டதற்காக அந்த பத்திரிக்கை மீதும் அதன் எழுத்தாளர் ஜைனி ஹசான் மீதும் கடும் நடவடிக்கை எடுப்பது என மாநில அரசாங்கம் முடிவு செய்துள்ளது,” என்றார் காலித்.

பிகேஎன்எஸ் எனப்படும் சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகத்தின் சொத்துக்கள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படுவது மீது அந்தப் பத்திரிக்கையின் முதுநிலை ஆசிரியருமான ஜைனி தமது  ‘Cuit’ பகுதியில் நேற்று கேள்வி எழுப்பியிருந்தார்.

மந்திரி புசார் மலாய் வம்சாவளியைச் சேர்ந்தவராக இருந்தாலும் அந்த மாநிலம் டிஏபி ஆட்சிக்குள் இருப்பதாகவும் அவர் எழுதியிருந்தார்.

ஏற்கனவே கூறப்பட்டது போல ஐந்து கட்டிடங்கள் அல்லாமல் பிகேஎன்எஸ் தனது சொத்துக்கள் அனைத்தையும் விற்கப் போவதாக அடையாளம் கூறாத  பிகேஎன்எஸ் வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஜைனி குறிப்பிட்டிருந்தார்.

அதற்குப் பதில் அளித்த காலித் அந்த விற்பனை உண்மையில் பிகேஎன்எஸ்-ஸுக்கு முழுமையாகச் சொந்தமான Private Real Estate Company (PREC) என்ற நிறுவனத்துக்கு மாற்றி விடுவதாகும் என்றார்.

ஜைனிக்கும் உத்துசானுக்கும் கோரிக்கை கடிதம் அனுப்புமாறு வழக்குரைஞர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் பிகேஎன்எஸ்-ஸும் அவ்வாறு செய்யும் என்றும் மந்திரி புசார் தெரிவித்தார்.

“நாங்கள் ஊடகச் சுதந்திரத்தை மதித்த போதிலும் ஊடகங்கள் பொய்யான அவதூறான செய்திகளை வெளியிடுவதற்கு அந்தச் சுதந்திரத்தைப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது.”