“தவறு செய்த” பாகாங் எம்ஏசிசி தலைவருக்கு டத்தோ பட்டம் வழங்கப்படுவது தள்ளி வைக்கப்பட்டுள்ளது

எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் பாகாங் பிரிவுத் தலைவர் மோ சம்சுடின், டத்தோ பட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது அந்த ஆணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முறைகேடான நடத்தைக்காக அவர் ஏற்கனவே விசாரிக்கப்பட்டு மூன்றாவது விசாரணையை எதிர்நோக்கியுள்ள வேளையில் அவருக்கு அந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளதே அதற்குக் காரணமாகும்.

அவர் டத்தோ பட்டத்தை வழங்கும் ‘Darjah Indera Mahkota Pahang’ விருதைப் பெறுவதாக இருந்தது.

விருதுகளுக்கு முன்மொழியப்படுகின்றவர்களை ஆய்வு செய்யும் போது அவர் ஏன் விடுபட்டு விட்டார் என ஒரு வட்டாரம் கேள்வி எழுப்பியது.

கடந்த இரண்டு நாட்களாக மலேசியாகினி தொடர்ந்து கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து அந்த விருது வழங்கப்படுவது ‘தள்ளி வைக்கப்பட்டுள்ளது’ என நேற்று அந்தச் செய்தி இணையத் தளத்துக்குத் தெரிவிக்கப்பட்டது.

கூட்டரசு, மாநில விருதுகளுக்கு முன்மொழியப்படுகின்றவர்கள்,  ஊழல், கிரிமினல் நடவடிக்கைகள் ஆகியவற்றில் சம்பந்தப்படவில்லை என்பதை உறுதி செய்வதற்காக அவர்களை ஆய்வு செய்யும் பொறுப்பு எம்ஏசிசி-க்கு வழங்கப்பட்டுள்ளது.

1990ம் ஆண்டுகளில் எம்ஏசிசி-யின் முன்னோடியான ஊழல் தடுப்பு நிறுவனம் மலாக்கா விருதளிப்பு சடங்கு ஒன்றின் ஒத்திகையின் போது ஊழல் விசாரணைகளுக்கு உட்பட்டுள்ள இரண்டு தனி நபர்களை அடையாளம் கண்டது.

“ஆகவே மோ சம்சுடினின் பெயர், அக்டோபர் 24ம் தேதியும் மீண்டும் கடந்த சனிக் கிழமையும் பத்திரிக்கைகளில் விருதுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள வேளையில் எப்படி ஆய்வு செய்யப்படாமல் தப்பித்தது ?” என அந்த வட்டாரம் கேள்வி எழுப்பியது.

அதனை விட முக்கியமானது எம்ஏசிசி-யிடமிருந்து அந்த விருதுக்கு அவர் முன்மொழியப்பட்டதாகும்,” என அந்த வட்டாரம் வருத்தமுடன் கூறியது.

“இது எம்ஏசிசி-யைக் கேலிப் பொருளாக்கியுள்ளது. அதற்கு அவமரியாதையையும் ஏற்படுத்தியுள்ளது.”

நேற்று அந்த விஷயம் குறித்து மோ சம்சுடினுடன் தொடர்பு கொள்ளப்பட்டது. “மலேசியாகினிக்கு புகார் செய்யப்பட்டுள்ளதால் நீங்களே அந்த விசாரணையை மேற்கொள்ள வேண்டும்,” என்று மட்டும் அவர் சொன்னார்.

எம்ஏசிசி தலைமை ஆணையர் அபு காசிம் முகமட்-உடனும் தொடர்பு கொள்ளப்பட்டது. அவர் துணைத் தலைமை ஆணையர் 1 முகமட் சுக்ரி அப்துல்-உடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

பாகாங் அரண்மனை அந்த விருதுக்கு மோ சம்சுடினை நேரடியாக முன்மொழிந்ததால் அவர் ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை என சுக்ரி சொன்னார்.

என்றாலும் அத்தகைய விஷயங்களில் முன்மொழியப்படுகின்றவர்களை ஆய்வு செய்யவும் விருதுகளைத் தடுக்கவும் எம்ஏசிசி-க்கு அதிகாரம் இருப்பதாக கூறப்பட்டது.

“பாகாங் அரசாங்கம் சம்பந்தப்பட்ட தனி நபருக்கான விருதை தள்ளி வைத்துள்ளது என எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது,” என சுக்ரி நேற்று மாலை மணி 6.30க்கு மலேசியாகினிக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.