‘பத்துமலை கொண்டோ அங்கீகரிக்கப்பட்ட கூட்டத்தில் அந்த இருவரும் இல்லை’

வெளியுறவுத் துணை அமைச்சர் ஏ கோகிலன் பிள்ளையும் உலு சிலாங்கூர் எம்பி கமலநாதனும் நகராட்சி மன்ற உறுப்பினர்களாக இருந்த போது பத்துமலைக் கோவிலுக்கு அருகில் சர்ச்சைக்குரிய 29 மாடி ஆடம்பர அடுக்கு மாடித் தொகுதிக்கு (கொண்டோ) அங்கீகாரம் வழங்கிய செலாயாங் நகராட்சி மன்ற முழு வாரியக் கூட்டத்தில் இல்லை.

“ஆம். கோகிலனும் கமலநாதனும் முழு வாரியக் கூட்டத்தில் இல்லை,” என மலேசியாகினி தொடர்பு கொண்ட போது அந்த நகராட்சி மன்றத்தில் உள்ள நம்பத்தகுந்த வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.

அந்த விஷயம் மீது செலாயாங் நகராட்சி மன்றத் தலைவர் ஜைனல் அபிடின் ஆலா அறிக்கை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அந்த கொண்டோ திட்டம் மீது முன்னாள் மஇகா தலைவர் எஸ் சாமிவேலு உட்பட பல மஇகா மூத்த தலைவர்கள் ஆதரவுடன் கோவில் குழு சிலாங்கூர் அரசாங்கத்துக்கு எதிராக கூட்டம் நடத்திய பின்னர் சர்ச்சை மூண்டது.

ஆனால் 2007ம் ஆண்டு சிலாங்கூர் பிஎன் கட்டுப்பாட்டில் இருந்த போது அந்தத் திட்டம் அங்கீகரிக்கப்பட்டது என்பதைக் காட்டும் ஆவணங்களை மாநில ஆட்சி மன்ற உறுப்பினர் ரோனி லியூ பின்னர் வெளியிட்டார்.

அந்த கொண்டோ திட்டத்தை அங்கீகரித்ததற்குப் பொறுப்பானவர்களில் கோகிலனும் கமலநாதனும் அடங்குவர் என்றும் லியூ தகவல் வெளியிட்டிருந்தார்.

ஆனால் கோகிலனும் கமலநாதனும் அந்தக் குற்றச்சாட்டை மறுத்து போலீசில் புகார் செய்துள்ளனர்.

தாம் செலாயாங் நகராட்சி மன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் அதன் ஒரிட மய்யத்தில் இடம் பெறாததால் Dolomite condominium திட்ட அங்கீகாரத்துக்கும் தமக்கும் சம்பந்தமில்லை என கோகிலன் கடந்த செவ்வாய்க்கிழமை மலேசியாகினியிடம் கூறியிருந்தார்.

ஆனால் நடப்பு செலாயாங் நகராட்சி மன்ற உறுப்பினரான லீ காய் லூன் அதனை மறுத்து ஒரிட மய்யத்தின் அங்கீகாரம் அனைத்தையும் மன்றம் அங்கீகரித்த பின்னரே அமல்படுத்த முடியும் எனத் தெரிவித்துள்ளார்.