பினாங்கு அரசு, நாடற்றவர்களாகவுள்ள மக்கள் மலேசிய குடியுரிமைக்கு விண்ணப்பம் செய்வதில் உதவுவதற்கு ஐந்து குடியுரிமை உதவியாளர்களை அமர்த்தியுள்ளது.
இதற்கென மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு அலுவலகம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார்.அது குடியுரிமைக்குத் தேவையான விவரங்களைத் திரட்டிக் கொடுப்பதற்கு பொறுப்பாக இருக்கும்.
இப்பிரச்னை இந்தியர்கள் சம்பந்தப்பட்டது மட்டும் அல்ல என்று லிம் கூறினார்.
“குடியுரிமை வழங்கும் அதிகாரம் கூட்டரசு அரசாங்கத்துக்கு மட்டுமே உண்டு என்றாலும் நாங்கள் அதற்கான முதல்கட்ட உதவிகளைச் செய்வோம்”, என்று டிஏபி தலைமைச் செயலாளருமான லிம் செய்தியாளர் கூட்டமொன்றில் இன்று தெரிவித்தார்.
அதன் தொடர்பில் மேலதிக விவரங்கள் நவம்பர் 15-இல் அறிவிக்கப்படும் என்றாரவர்.
நாடற்றவர் விவகாரம் ஒரு இன விவகாரம் அல்ல
கொம்டாரில் நாடற்றவர் விவகாரம்மீது நடைபெற்ற ஒரு கூட்டத்துக்குப் பின்னர் முதலமைச்சர் செய்தியாளர்களிடம் பேசினார். அக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் II பி.இராமசாமி, மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் லாவ், சூ கியாங், ஈப்போ பாராட் எம்பி, எம்.குலசேகரன், சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். ராயர், ஏ.தனசேகரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
பினாங்கு இந்து சங்கத் தலைவர் ஜி.சண்முகனும் மாநில டிஏபி மகளிர் உதவித் தலைவி கே.மங்களேஸ்வரியும்கூட அங்கிருந்தனர்.
மே மாதம் பிகேஆர் தலைமையிலான சிலாங்கூர் அரசு,இந் நாட்டில் பிறந்தும் குடியுரிமை பெற்றிராதவர்களைப் பதிவு செய்யும் இயக்கம் ஒன்றை மேற்கொண்டது.அதில் பதிந்துகொள்ள நூற்றுக்கணக்கானவர் வந்தனர்.
வந்தவர்களில் பெரும்பாலோர் இந்திய சமூகத்தினர். ஆனால், சிவப்பு நிற மைகார்ட் வைத்திருந்த சீனர்களும் கணிசமான எண்ணிக்கையில் இருந்தனர்.
அதற்குமுன்னதாக, 2001 டிசம்பரில் பிரதமர் அலுவலகத்தின் பணிக்குழு ஒன்று 14,882 ‘நாடற்ற’ மக்களைப் பதிவு செய்திருந்தது. அவர்களிலும் பெரும்பாலோர் இந்தியர்கள்தாம்.
நாடற்றவர் விவகாரத்தைக் கவனிக்க ஆலோசனை வாரியம்
இதனிடையே, இவ்விவகாரத்தைக் கவனிக்க குலசேகரன், சண்முகன், மங்களேஸ்வரி அகியோரின் தலைமையில் ஆலோசனை வாரியம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
நாடற்றவர் விவகாரம் “ஒரு தேசிய பிரச்னையும் பேரிடருமாகும்” என்று பத்து கவான் எம்பி-யான இராமசாமி கூறினார்.
இதில் அதிகாரப்பூர்வமான அல்லது உண்மையான புள்ளி விவரம் எதுவும் இல்லை என்றாலும் நாடற்றவர் எண்ணிக்கை மிகப் பெரிதாகத்தான் இருக்க வேண்டும் என்றாரவர்.
அண்மையில் பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன் நாட்டில் சுமார் 300,000 இந்தியர்கள் நாடற்ற மக்களாக இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.
“சீனர்கள், மலாய்க்காரர்கள், பூர்வ குடிமக்கள் உள்பட எல்லா சமூகங்களையும் பாதிக்கும் ஒரு பிரச்னை இது”, என்றவர் வலியுறுத்தினார்.
இவ்விவகாரம் பற்றி டிஏபி மத்திய செயலவையில் விவாதிக்கப்பட்டிருப்பதாக குலசேகரன் கூறினார்.
“இவ்விவகாரம் தொடர்பில் பக்காத்தான் ஆட்சியில் உள்ள மற்ற மாநிலங்களும் இங்கு நாங்கள் செய்ததைப் பின்பற்ற வேண்டும் என விரும்புகிறோம்…..இது இன விவகாரம் அல்ல, சமூக விவகாரம்”, என்றாரவர்.