நஜிப்பை எதிர்த்து ஹாடி போட்டி; நிக் அசிஸ் முழு ஆதரவு

அடுத்தப் பொதுத் தேர்தலில் தாம் எந்த ஒரு தொகுதியிலும், பிரதமர் நஜிப்பின் பெக்கான் நாடாளுமன்ற தொகுதி உட்பட, போட்டியிட தயாராக இருப்பதாக பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறியிருந்தார். பாஸ் கட்சியின் ஆன்மீக தலைவர் நிக் அப்துல் அசிஸ் நிக் மாட் அதற்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளார்.

“அவர் கட்சியின் தலைவர். கட்சியின் நலனுக்காவும் இஸ்லாத்தின் போராட்டத்திற்காகவும் அவர் எதனைக் கூறினாலும் நாங்கள் ஆதரிப்போம்.

“அடுத்தப் பொதுத் தேர்தலில் ஹாடி உண்மையிலேயே பெக்கானில் சமயத்தைவிட இனப் பெருமை பேசுபவர்களுக்கு எதிராக போட்டியிட விரும்பினால், நான் அவருக்கு வலுவான ஆதரவு அளிப்பேன்”, என்று அவர் கூறியதாக சினார் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அம்னோவின் தலைவரான நஜிப் கடந்த பொதுத் தேர்தலில் 36,262 வாக்குகளைப் பெற்று வெறும் 9,798 வாக்குகளைப் பெற்ற   பிகேஆர் வேட்பாளரை தோற்கடித்தார்.

ஆன்மீக தலைவர் நிக் அசிஸ் தற்போதைய மாராங் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் தலைவருமான ஹாடியின் துணிச்சலைப் பாராட்டினார்.

“இப்போது, வெற்றியோ தோல்வியோ அது வேறு விசயம். பிரதமரின் தொகுதியில் போட்டியிடுவதற்கு தயார் என்ற அவரது துணிச்சலான அறிவிப்பைத் தொடர்ந்து நாம் அவரை ஆதரிப்பது முக்கியமாகும்”, என்றாரவர்.

பெக்கான் தொகுதி 1976 ஆம் ஆண்டிலிருந்து, நஜிப்பின், அவரது 22 ஆவது வயதிலிருந்து, கையிலிருந்து வருகிறது. அதற்கு முன்பு அத்தொகுதியை அவரது தந்தை அப்துல் ரசாக், இரண்டாவது பிரதமர், பிரதிநிதித்தார்.