வெட்டுமர வணிகரான மைக்கல் சியாவுடன் தமது புதல்வருக்கு உள்ள தொடர்புகள் பற்றி எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில் புகார் செய்யுமாறு பிரதமர் துறை அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஜிஸ் பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி ராம்லிக்கு சவால் விடுத்துள்ளார்.
தமது புதல்வரான நெடிம் முகமட் நஸ்ரி, சியாவுக்குச் சொந்தமான காரைப் பயன்படுத்தினர் எனக் கூறப்படுவதை நிரூபிப்பதற்கு வலுவான ஆதாரங்களை வைத்திருப்பதாக ராபிஸி நம்புவதாகத் தோன்றுவதால் அவர் தமக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நஸ்ரி சொன்னதாக சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
“நான் ராபிஸிக்குச் சவால் விடுக்கிறேன். நான் நீதிமன்றத்தில் காத்திருப்பேன். நான் அவருக்கு எதிராகப் புகார் செய்யப் போவதில்லை. அவர் தான் குற்றம் சாட்டுகிறார். அதனால் அந்த விவகாரத்தை அவர் தான் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும்.”
“நமது சட்டங்களின் கீழ் குற்றம் சாட்டுகின்றவரே அதனை மெய்பிக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர் அல்ல.”
“அது குறித்து எம்ஏசிசி-யிடம் புகார் கொடுக்குமாறும் நான் அவருக்குச் சவால் விடுக்கிறேன்,” என அவர் கூறியதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நஸ்ரிக்கு எதிராக இன்று பிற்பகல் எம்ஏசிசி-யில் புகார் செய்யப் போவதாக ராபிஸி ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
சட்டத்துறைக்குப் பொறுப்பான அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ், வணிகரான மைக்கல் சியா, 40 மில்லியன் ரிங்கிட் பெறும் ‘அம்னோவுக்கான அரசியல் நன்கொடை’ சர்ச்சையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளதில் சுய நலன் சம்பந்தப்பட்டுள்ளதாக ராபிஸி ஏற்கனவே கூறியுள்ளார்.
நஸ்ரிக்கும் சியாவுக்கும் இடையிலான தொடர்பு சியாவுக்கு சொந்தமான 459,000 ரிங்கிட் மதிப்புள்ள கறுப்பு நிற Hummer SUV ரக வாகனத்தின் வடிவத்தில் உள்ளதாக அவர் தெரிவித்தார். அந்த வாகனத்தை நஸ்ரியின் மூத்த புதல்வரான நெடிம் பயன்படுத்தியிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.
அந்த Hummer SUV ரக வாகனத்தின் உரிமையாளர் சியா தியன் வோ எனக் கூறும் போக்குவரத்து சம்மன் டிக்கெட் ஒன்றின் பிரதியை ராபிஸி காட்டினார்.
நெடிம் வசித்து வரும் ஆடம்பர அடுக்கு மாடி வீட்டுப் பகுதியில் அந்த வாகனம் அடிக்கடி தென்பட்டதைக் காட்டும் படங்களையும் (ரகசியமாகப் பெறப்பட்டவை) அவர் வெளியிட்டார்.
அதனை மறுத்த நஸ்ரி அந்த விவகாரம் மீது நாடாளுமன்றத்தில் தாம் தெரிவித்த பதில் சட்டத்துறைத் தலைவர் அலுவலகம், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் ஆகியவற்றிடமிருந்து வந்தது என்றும் சொன்னார்.
தமது புதல்வர் வயதானவர் ( adult) என்பதால் அவரது நடவடிக்கைகளுக்குத் தாம் பொறுப்பேற்க முடியாது என்றார் அவர்.