சுவாராம் விசாரணையில் உதவ பெர்சே ஆர்வலருக்கு ஆர்ஓஎஸ் அழைப்பாணை

சங்கப் பதிவாளர் அலுவலகம் (ஆர்ஓஎஸ்), மனித உரிமை போராட்ட அமைப்பான சுவாராம் மீதான விசாரணையில் உதவ சமூக ஆர்வலர் மரியா சின் அப்துல்லாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இது, அந்த அமைப்புடன் எவ்வித தொடர்பும் கொண்டிராத அவருக்குப் பெரும் திகைப்பைத் தந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை அழைப்புக்கடிதம் தம் அலுவலகத்துக்கு வந்ததாக தூய்மையான, நியாயமான தேர்தலுக்காக போராடும் பெர்சே அமைப்பின் இயக்கக்குழு உறுப்பினரான மரியா கூறினார்.

அன்று அவர் அலுவலகத்தில் இல்லை. அதனால் இன்று இன்னொரு கடிதம் அவரின் வீட்டுக்குத் தொலைநகல்வழி அனுப்பப்பட்டது.

சுவாராமில் தாம் உறுப்பினராகக்கூட இல்லை என்று மரியா மலேசியாகினியிடம் தெரிவித்தார். ஆனால், அவர் அந்த அமைப்பின் நடவடிக்கைகளை ஆதரிப்பதுண்டு.

“நான் திகைத்துப் போனேன். என் பெயர் விசாரணை அறிக்கையில் இருக்கிறதா என்று கேட்டேன். இல்லை என்றார்கள். நான் சுவாராமில் உறுப்பினர் இல்லை. அப்படியிருக்க எதற்காக என்னிடம் வாக்குமூலம் பெற விரும்புகிறார்கள் என்று தெரியவில்லை.

“புதன்கிழமை வந்து சந்திக்குமாறு ஆர்ஓஎஸ் கூறியது.ஆனால், அதை வெள்ளிக்கிழமைக்குத் தள்ளிவைக்குமாறு கேட்டுக்கொண்டேன்”, என்றாரவர்.

குற்றவியல் நடைமுறைச் சட்டம் பகுதி 112-இன்கீழ் ஒரு வாக்குமூலம் அளிக்க அவர் அழைக்கப்படுவதாக சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மைய மாதங்களாக சுவாராம், அரசாங்கத்தின் கடும் நெருக்குதலுக்கு இலக்காகியுள்ளது. ஆறு அரசுதுறைகளைப் பிரதிநிதிக்கும் பணிக்குழு ஒன்று பல கோணங்களில் அதன் செயல்பாடுகளை ஆராய்ந்து வருகிறது.

TAGS: