ஹுடுட் சட்டத்தை அமலாக்கும் பாஸ் யோசனையை மசீச எதிர்ப்பதாக அதன் தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் அடிக்கடி அறிக்கைகள் விடுத்த போதிலும் பெரும்பான்மை மக்கள் இஸ்லாமிய கிரிமினல் சட்டத்தை ஏற்றுக் கொண்டால் அதனை ஏற்றுக் கொள்ள அவர் தயாராக இருப்பதாக அண்மையில் அவரைச் சந்தித்த அம்னோ தலைவர் ஒருவர் கூறியிருக்கிறார்.
ஹுடுட் சட்டத்தைப் பின்பற்றுகின்ற பெரும்பாலான நாடுகள் ஊழல் மலிந்தவையாகவும் பாதுகாப்பற்றதாகவும் இருப்பதாக கூறி சுவா அதனை வன்மையாக நிராகரித்த பின்னர் ஹுடுட் குறித்து விளக்கமளிப்பதற்காக அவரையும் மற்ற மசீச தலைவர்களையும் சந்தித்த அம்னோ இளம் உலாமா பணிக் குழுச் செயலகத் தலைவர் பாத்துல் பேரி மாட் ஜாஹ்யா கூறினார்.
அனைத்து மக்கள் மீதும் ஹுடுட் அமலாக்கப்படுவதற்கு சுவா ஒப்புக் கொள்கின்றாரா என வினவப்பட்ட போது ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு இணங்க சுவா நடது கொள்வார் என பாத்துல் மலாய் மொழி நாளேடான சினார் ஹரியானிடம் தெரிவித்தார்.
“அனைவருக்கும் ஹுடுட் வேண்டும் என பெரும்பான்மை மக்கள் விரும்பினால் அவரும் அதனை ஏற்றுக் கொள்வார், பெரும்பான்மை மக்கள் பாஸ் கூறும் ஹுடுட் சட்ட வடிவத்தை ஏற்றுக் கொண்டாலும் அவர் அதனை ஒப்புக் கொள்வார். நாம் ஜனநாயக நாட்டில் இருக்கிறோம்,” என அவர் சொன்னதாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிளந்தானிலும் திரங்கானுவிலும் பாஸ் அமலாக்க விரும்பும் ஹுடுட் சட்டத்தை ஆய்வு செய்த பின்னர் சுவா தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளதாக பாத்துல் கருதுகிறார்.
முஸ்லிம் அல்லாதவர் என்ற முறையில் பொருளாதாரம், அமைதி, தேசிய வருமானம் ஆகியவற்றின் அடிப்படையில் இஸ்லாமிய கிரிமினல் சட்டத்தை சுவா மதிப்பீடு செய்ததாகவும் அவர் சொன்னார்.
துல்லிதமில்லாத அந்தத் தகவல்கள் காரணமாக சுவா, அதற்கு எதிராக கடுமையான அறிக்கைகளை விடுக்க வகை செய்து விட்டது என பாத்துல் மேலும் விவரித்தார்.
“அவர் ஹுடுட் இஸ்லாமியச் சட்டம் என்பதை புரிந்து கொண்டுள்ளார். அதனை மதிக்கிறார். எல்லா முஸ்லிம்களும் ஹுடுட்டை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார். இஸ்லாம் கூட்டரசு சமயம் என்பதையும் அவர் புரிந்து கொண்டுள்ளார்.”