‘நாம் டப்பாங் செய்வோம்’ : பெட்ரோனாஸ் தீபாவளி விளம்பரம் கண்டிக்கப்படுகிறது

இவ்வாண்டு பெட்ரோனாஸ் இந்துக்களுக்கு ‘மகிழ்ச்சியான தீபாவளி’ என வாழ்த்துக் கூறும் விளம்பரம் கண்டனத்துக்கு இலக்காகியுள்ளது.

காலஞ்சென்ற திரைப்படத் தயாரிப்பாளர் யாஸ்மின் அகமட், பாச உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டு தயாரித்த விளம்பரங்களுக்கு நேர்மாறாக அது அமைந்துள்ளது.

மூன்று நிமிடங்களுக்கு ஒடும் அந்த விழாக் கால விளம்பரத்தின் தலைப்பு ‘நாம் டப்பாங் செய்வோம்‘ என்பதாகும். சாலைகளில் மக்கள் நடனமாடுவதை அது சித்தரிக்கிறது. அது பல தவறான கருத்துக்களைக் கொண்டுள்ளது என பல ரசிகர்கள் தெரிவித்தனர்.

‘டப்பாங் குத்து’ என்பதற்கு விக்கிபிடியா இவ்வாறு விளக்கம் தருகின்றது. “தமிழர் கிராமங்களில் இறப்பு வீடுகளில் அழுகுரலைக் குறைக்க அல்லது இறப்பு நிகழ்ந்துள்ளதை தெரிவிக்க அந்த இசை எழுப்பப்படுகின்றது. மதுபானம் ஊறுகாய்களுடன் வழக்கமாகப் பாடப்படும் பாடல் அதுவாகும்.’

ஞாயிற்றுக்கிழமை யூ டியூப்பில் சேர்க்கப்பட்ட அந்த மகிழ்ச்சியான தீபாவளி விளம்பரம் இந்த வார இறுதியில் ஒலி ஒளிபரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

யூ டியூப்-பில் எழுத்தப்பட்டுள்ள கருத்து ஒன்று இவ்வாறு கூறுகின்றது: “இறைவனுடைய நன்மைக்காக இந்திய விழாக்கள் குறித்து ஒரளவு ஆய்வு செய்யுங்கள். இது எந்த வகையில் இந்தியப் பண்பாட்டை பிரதிபலிக்கின்றது ?”

இன்னொரு யூ டியூப் கருத்து: ” தீபாவளிக்கு நான் இதுவரை பார்த்திராத மோசமான விளம்பரம் அதுவாகும். அது அவமானம்.

“அந்த விளம்பரத்தை தயாரித்தவருக்கு என்னுடைய எரிச்சலை தெரிவித்துக் கொள்கிறேன். அந்த விளம்பரத்தைத் தயவு செய்து தொலைக்காட்சியில் ஒளியேற்ற வேண்டாம். நான் யாஸ்மின் அகமட் விளம்பரங்களுக்காக ஏங்குகிறேன்.

மலேசிய இந்து சங்க முன்னாள் தலைவர் ஏ வைத்திலிங்கம் இவ்வாறு சொல்கிறார்: ” அது தொடக்கத்திலிருந்தே சர்ச்சைக்குரிய விளம்பரமாகும். குண்டர்களைப் போன்று தோற்றமளிக்கும் இந்திய பாத்திரங்கள் சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்.’

“சாலை நடுவே நடனமாடி போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகின்றவர்கள் என இந்தியர்கள் மீது தவறான தோற்றத்தையும் அது தருகின்றது.”

“ஹிண்ட்ராப் இயக்கம், பெர்சே 3.0 ஆகியவற்றைப் போன்றது எனச் சித்தரித்து போக்குவரத்து நெரிசலுக்கு இந்தியர்கள் பழி ஏற்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றது. அது நிறுத்தப்பட வேண்டும். யூ டியூப்-பிலிருந்தும் ஒளியேற்றப்படுவதிலிருந்தும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.”

விளம்பரம் இளைஞர்களை நோக்கமாகக் கொண்டது

யூ டியூப்பில் அந்த வீடியோ ஒளிப்பதிவைப் பார்த்த செனட்டர் எஸ் ராமகிருஷ்ணன், ” பெட்ரோனாஸ் விளம்பரம் இளைஞர்களை நோக்கமாகக் கொண்டிருந்தாலும் விரைவில் மறைந்து போகும் ஒரு போக்கை பெரிதுபடுத்துகிறது,’ என்றார்.

5,000 ஆண்டுகள் பழமையான இந்தியப் பண்பாட்டை அது பிரதிபலிக்கவில்லை என்றும் உலகம் முழுவதும் உள்ள இந்துக்களின் தீபாவளி கொண்டாட்ட உணர்வுகளை அது காட்டவில்லை என்றும் அவர் சொன்னார்.

“அந்த விளம்பரம் இந்தியப் பண்பாட்டைப் பிரதிபலிக்கவில்லை. வன்முறைகளையும் குண்டர்தனத்தையும் சித்தரிக்கும் தமிழ்த் திரைப்படங்களின் நடப்புப் போக்கு, திரைப்பட நட்சத்திரங்களை கொண்டாடும் போக்கு ஆகியவற்றை நிலைக்களனாகக் கொண்டுள்ளது.’

“விளம்பரத்தின் இறுதியில் தமிழ் திரைப்பட உலக சூப்பார் ஸ்டாரான ரஜினி காந்த்தை பிரதிபலிக்கும் பாத்திரம் ஒன்று காட்டப்படுகின்றது. இந்தியர்கள் சமூகத்துக்கு இடையூறாக இருப்பதாக அது  தெரிவிக்கின்றது. அவர்களை சீரியஸாக எடுத்துக் கொள்ளக் கூடாது.”

அந்த விளம்பரம் மகத்தானது என்பதைக் காட்டுவதற்கு முயற்சி செய்யப்பட்டாலும் அது இந்தியர்களுக்கு விஷமக்காரர்கள் என்றும் கடமை தவறுகின்றவர்கள் என்றும் தவறான தோற்றத்தை அளித்துள்ளது என ராமகிருஷ்ணன் மேலும் சொன்னார்.

அந்த பெட்ரோனாஸ் தீபாவளி விளம்பரத்தைப் பார்த்த திரைப்பட இயக்குநர் ஒருவர் இவ்வாறு கூறுகிறார்:  “அதனை  இந்தியர் அல்லாத ஒரு குழுவினர் அல்லது இந்தியப் பண்பாட்டையும் பழக்க வழக்கங்களையும் உண்மையில் நன்கு அறியாத, தவறான ஆலோசனைகளைப் பெற்ற இந்தியர்கள் தயாரித்திருக்க வேண்டும் எனத்  தெளிவாகத் தெரிகிறது.”

TAGS: