லியூ: சிலாங்கூர் பத்துமலை ‘கொண்டோ’ அங்கீகாரத்தை ரத்துச் செய்யக் கூடும்

சிலாங்கூர் மாநில சுற்றுச் சூழல் துறை தெரிவித்த ஆட்சேபங்களை அலட்சியம் செய்ததற்காக பத்து மலையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள டோல்மைட் பார்க் அவினியூ கொண்டோமினியம் திட்டத்துக்கு வழங்கப்பட்ட அனுமதியை மாநில அரசாங்கம் ரத்துச் செய்யக் கூடும்.

அந்தத் தகவலை இன்று மாநில ஆட்சி மன்ற உறுப்பினர் ரோனி லியூ வெளியிட்டார்.

அந்த 29 மாடி ஆடம்பர அடுக்கு மாடி (கொண்டோ) திட்டத்துக்கும் உலகப் புகழ் பெற்ற பத்துமலைக்கும் இடையிலான நில ஒதுக்கீட்டுப் பகுதி மிகவும் குறுகலாக இருக்கிறது. அதனால் பாறைகள் சரியக் கூடும். நிலத்தின் நிலைத்தன்மையும் சீர்குலையக் கூடும் என லியூ நேற்று மலேசியாகினியிடம் கூறினார்.

“நாம் அந்தத் திட்டத்தை நிறுத்தி விட்டு டோல்மைட் நிறுவனத்துக்கு இழப்பீடு கொடுக்காமல் இருக்க முடியுமா என சிலர் என்னிடம் வினவினர். இப்போது நாம் அந்தத் திட்டத்தை நீக்கி விட முடியும்,” என்றார் அவர்.

“கடந்த காலத்தைச் சரி செய்யும் உரிமையை நாம் இப்போது பெற்றுள்ளோம்.”

முந்திய பிஎன் அரசாங்கம் அந்தத் திட்டத்தை முதலில் அங்கீகரித்திருக்கவே கூடாது என்றும் லியூ சொன்னார்.

2007ம் ஆண்டு ஜனவரி 24ம் தேதி சிலாங்கூர் சுற்றுச் சூழல் துறை செலாயாங் நகராட்சி மன்றத்துக்கு ( எம்பிஎஸ்) எழுதிய கடிதத்தில் சுற்றுச்சூழல் துறையின் ஆட்சேபத்தையும் பொருட்படுத்தாமல் எம்பிஎஸ்  2007ம் ஆண்டு அந்தத் திட்டத்தை அங்கீகரித்துள்ளது சுட்டிக் காட்டப்படுள்ளது என தி சன் ஆங்கில மொழி ஏட்டில் வெளியான செய்தி குறித்து லியூ-விடம் வினவப்பட்டது.

மலேசியாகினிக்கும் கொடுக்கப்பட்ட அந்தக் கடிதத்தின் பிரதியில் சுற்றுச்சூழல் துறை அந்தத் திட்டத்தை ஆதரிக்கவில்லை என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமர்பிக்கப்பட்ட மேம்பாட்டு யோசனையில் உத்தேச ‘கொண்டோ’ திட்டத்துக்கும் மலைக்கும் இடையில் மாநில அரசாங்கக் கொள்கைக்கு இணங்க, போதுமான நிலம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

“ஆகவே அந்த மேம்பாட்டை அந்தத் துறை ஆதரிக்கவில்லை. ஏனெனில் அது நிலச் சரிவுகளையும் மற்ற பிரச்னைகளையும் ஏற்படுத்தும் வாய்ப்புக்களைக் கொண்டுள்ளது,” என சுற்றுச்சூழல் துறையின் கடிதம் குறிப்பிடுகிறது.

மண் அறிவியல் துறையும் ஐயம் தெரிவித்துள்ளது

சிலாங்கூரில் உள்ள கனிவள மண் அறிவியல் துறையும் தனது கடிதத்தில் அந்தத் திட்டம் மீது தனது ஐயப்பாடுகளைத் தெரிவித்துள்ளதுடன் மேம்பாட்டாளர் நிறைவேற்ற வேண்டிய ஐந்து கட்டுமான நிபந்தனைகளையும் பட்டியலிட்டுள்ளது.

அந்தத் துறையின் கடிதத்தின் நகலும் மலேசியாகினிக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க பத்துமலை ஸ்ரீ சுப்ரமணியர் கோவிலுக்கு அருகில் அமையும் அந்த மாபெரும் ‘கொண்டோ’ திட்டம் தொடர்பில் அந்தக் கோவில் குழு முன்னாள் மஇகா தலைவர் எஸ் சாமிவேலு உட்பட அந்தக் கட்சியின் பெரும் புள்ளிகள் ஆதரவுடன் சிலாங்கூர்  மாநில அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய பின்னர் அந்த விவகாரம் மக்கள் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியது.

அக்டோபர் மாத இறுதியில் மஇகா ஆதரவு பெற்ற கோவில் குழு அந்தத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து பிரச்னை மூண்டது.

என்றாலும் அதற்குப் பின்னர் 2007ம் ஆண்டு சிலாங்கூர் பிஎன் கட்டுப்பாட்டில் இருந்த போது இயங்கிய மாநில அரசாங்கம்  அந்தத் திட்டத்தை அங்கீகரித்ததைக் காட்டும் ஆவணங்களை லியூ வெளியிட்டார்.

அந்தத் திட்டத்துக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதற்குப் பொறுப்பானவர்களில் கெரக்கான் செனட்டர் ஏ கோகிலன் பிள்ளையும் உலு சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர் பி கமலநாதனும் அடங்குவர் என்றும் லியூ கூறியதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் கோகிலனும் கமலநாதனும் அந்தக் குற்றச்சாட்டை மறுத்து அந்த விவகாரம் மீது போலீசில் புகார் செய்துள்ளனர்.

அந்த விஷயத்தை சுயேச்சைப் பணிக்குழு ஒன்ரு ஆய்வு செய்யும் என சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

இன்று மாநில ஆட்சி மன்றக் கூட்டத்துக்கு பின்னர் அந்தப் பணிக்குழு உறுப்பினர்கள் பெயர்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.