பாஸ் கட்சிக்கும் ஜயிஸ் என்ற சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறைக்கும் இடையில் இன்று நிகழவிருந்த சந்திப்பு சுல்தானுடைய அறிவுரையைத் தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
“நாங்கள் இன்று சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு நாங்கள் கேட்டிருந்தோம். ஆனால் அந்த விவகாரம் இன்னும் விசாரணையில் இருப்பதால், விசாரணை மூலம் கிடைக்கும் தகவல்கள் யாருக்கும் கசியாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக எந்தத் தரப்பையும் சந்திக்க வேண்டாம் என சுல்தான் அறிவுறுத்தியிருப்பதாக ஜயிஸ் பதில் கூறியுள்ளது”, என பாஸ் உதவித் தலைவர் மாஹ்புஸ் ஒமார் தெரிவித்தார்.
ஜயிஸ் தனது விசாரணையை முடித்துக் கொண்டதும் அதனைச் சந்திக்க இயலும் என பொக்கோக் செனா எம்பியுமான அவர் நம்பிக்கை கொண்டுள்ளார்.
“ஜயிஸ் விசாரணை முடிந்ததும் அதனைச் சந்திக்க முடியும் என நாங்கள் நம்புகிறோம். உண்மையில் அன்றைய தினத்தில் என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ள நாங்கள் ஜயிஸையும் டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலயத்தையும் சந்திக்க விரும்புகிறோம்.”
“தாங்கள் அந்த இடத்தைச் சோதனை செய்யவில்லை என ஜயிஸ் சொல்கிறது. ஆனால் தேவாலயமும் அந்த நிகழ்வை ஏற்பாடு செய்த ஹரப்பான் கம்யூனிட்டி என்ற அரசு சாரா அமைப்பும் சோதனை நடந்ததாகக் கூறுகின்றன. ஆகவே நாங்கள் அவர்களைச் சந்திக்க விரும்புகிறோம்”, என்றார் மாஹ்புஸ்.
நோன்புப் பெருநாளுக்குப் பின்னரே ஜயிஸ் விசாரணை நிறைவுக்கு வரும் என பாஸ் கட்சிக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் மாஹ்புஸ் சொன்னார்.
என்றாலும் இஸ்லாமிய அமலாக்க அமைப்பான ஜயிஸ் விசாரணையை விரைவு செய்வது நல்லது என்று குறிப்பிட்ட அவர், பிரச்னை நீடிப்பதால் தேவையற்ற ஊகங்களே அதிகரிக்கும் என்றார்.
“ஜயிஸ் கூடிய விரைவில் தனது விசாரணையை முடித்துக் கொள்ளும் என நாங்கள் நம்புகிறோம். நீண்ட காலம் எடுத்துக் கொண்டால் எல்லா வகையான சர்ச்சைகளும் உருவாகக் கூடும். அது எல்லாத் தரப்புக்களுக்கும் நல்லதல்ல.”
டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலய வளாகத்தில் தான் மேற்கொண்ட “சோதனை” குறித்த பூர்வாங்க அறிக்கையை ஜயிஸ் மந்திரி புசார் காலித் இப்ராஹிமிடம் சமர்பித்துள்ளதாக இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.
ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலய வளாகத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் நிகழ்ந்த நிதி திரட்டும் விருந்து நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டவர்களிடையே மதம் மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தகவல் கிடைத்ததின் பேரில் ஜயிஸ் அதற்குள் நுழைந்தது.
அங்கிருந்த கூட்டத்தினரில் 12 முஸ்லிம்களை ஜயிஸ் கண்டு பிடித்தது. ஆனால் முஸ்லிம்களை மதம் மாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுவதை விருந்து ஏற்பாட்டாளர் மறுத்துள்ளார். எச்ஐவி/ஏய்ட்ஸ் நோயாளிகளுக்கு உதவும் அமைப்பு ஒன்றுக்கு நிதி திரட்டும் பொருட்டு அந்த விருந்து நடத்தப்பட்டதாக அவர் சொன்னார்.