பெர்சே 2.0: பிஎஸ்சி-யுடன் பேசுவதற்கு நாங்கள் தயார்

விரைவில் நாடாளுமன்றம் கூடி அதில் தேர்தல் சீரமைப்புமீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு(பிஎஸ்சி) அமைக்கப்படவுள்ள வேளையில், பிஎஸ்சி-யுடன் பேச்சு நடத்த தான் ஆயத்தமாக இருப்பதாக பெர்சே 2.0 கூறியுள்ளது.

அதன் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன், பிஎஸ்சி “நேர்மையானதாக” இருந்தால் அது பெர்சே 2.0-உடன் பேச்சு நடத்த வேண்டும் என்றார். 13வது பொதுத் தேர்தலுக்குமுன் தனது தேர்தல் சீரமைப்புக் கோரிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்கான அக்கூட்டமைப்பின் இயக்கத்தைத் தொடக்கிவைத்து உரையாற்றியபோது அம்பிகா அவ்வாறு கூறினார்.

“(உள்துறை) அமைச்சர் (ஹிஷாமுடின் உசேன்) எங்களைச் சட்டவிரோத அமைப்பு என்று அறிவித்திருப்பதால், எங்களுடன் பேச்சு நடத்தக்கூடாது என்பதுபோன்ற எண்ணம் இருப்பதாக தெரிகிறது. தேர்தல் ஆணையம்(இசி) அப்படித்தான் கூறியது. ஆனால், பிஎஸ்சி நேர்மையானதாக இருந்தால் எங்களுடன் பேச்சு நடத்த வேண்டும்”.

பிஎஸ்சியுடன் பேச்சு நடத்த பெர்சே 2.0 ஆயத்தமாக இருக்கிறது என்றாரவர்.

“13வது பொதுத் தேர்தலுக்குமுன் எட்டுக் கோரிக்கைகளை அமல்படுத்துக” என்னும் அந்தக் கூட்டமைப்பின் இயக்கம் நேற்று கோலாலம்பூரில் தொடக்கிவைக்கப்பட்டபோது சுமார் 300 ஆதரவாளர்கள் அந்நிகழ்வில் கலந்துகொண்டார்கள்.

தேர்தல் சீரமைப்புக்கு பிஎஸ்சி அமைக்கப்பட்டாலும் அதன் பரிந்துரைகள் அடுத்த தேர்தலுக்குமுன் நடைமுறைப்படுத்தப்படும் என்ற உத்தரவாதத்தை அளிக்க பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மறுத்துவிட்டதால் இந்த இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. 

அந்த வகையில், ஜூலை 9-இல், தேர்தல் சீரமைப்புக் கோரிக்கைக்கு ஆதரவாக பல்லாயிரக்கணக்கான மக்களைத் திரட்டி கோலாலம்பூரில் பேரணியை வெற்றிகரமாக நடத்திய பெர்சே, இப்போது மீண்டும் போர்முரசு கொட்டத் தொடங்கியுள்ளது.

நேற்றைய நிகழ்வுக்கு வந்த பலரும்-அம்பிகா உள்பட- தடைசெய்யப்பட்ட பெர்சே 2.0 டி-சட்டைகளை அணிந்திருந்தனர்.

அரசாங்கம் அதன் கோரிக்கையை ஏற்காவிட்டால் மீண்டும் தெரு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுமா என்று கேட்கப்பட்டதற்கு அவர் நேரடியாக பதில் அளிக்காமல் பிஎஸ்சி-இன் “நல்லெணத்தில்” நம்பிக்கை வைத்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

“எங்களின் எல்லாக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டால் பின்னர் பெர்சே-க்கு அவசியமிருக்காது.”

நாடுதழுவிய இயக்கம்

இப்போதைக்கு அந்தக் கூட்டமைப்பு,  தேர்தல் சீரமைப்புத் தொடர்பில் அரசாங்கம் ஆகஸ்ட் 15-இல் அளித்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்த நாடுமுழுக்கக் கூட்டம் நடத்துவதில் கவனம் செலுத்தும்.

“அரசாங்கத்துக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்பது முக்கியம். மக்கள் தங்கள் நோக்கத்தைத் தெளிவாக சொல்லிவிட்டார்கள்.எட்டுக் கோரிக்கைகளும் அடுத்த பொதுத் தேர்தலுக்குமுன் அமலாக்கப்பட வேண்டும்”, என்று பெர்சே 2.0 இயக்ககுழு உறுப்பினர் மரியா சின் அப்துல்லா கூறினார்.

பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேராக், ஜோகூர், சாபா, சரவாக் ஆகிய மாநிலங்களிலும் இந்த இயக்கம் நடத்தப்படும்.ஆண்டு இறுதிக்குள் மற்ற மாநிலங்களுக்கும் அது விரிவுபடுத்தப்படும் என்றாரவர்.

அரசு,பெர்சே 2.0 ஜூலை 9 பேரணியை நடத்த விடாமல் தடுப்பதற்காக அதைச் சட்டவிரோத அமைப்பு என்று  பிரகடனம் செய்தது.ஆனால், தடையை மீறியும் பேரணி வெற்றிகரமாக நடந்தது.அதன் விளைவாகத்தான் தேர்தல் சீரமைப்பை ஆராய பிஎஸ்சி அமைக்கப்படுவதாக அரசு அறிவித்தது.

தேர்தல் நடைமுறையில் பல குறைகள் இருப்பதால் அடுத்த பொதுத் தேர்தலுக்குமுன் அதைச் சீர்படுத்த வேண்டும் என்று வாதிடும் பெர்சே 2.0-க்கு, தடைவிதித்த அரசை எதிர்த்து வழக்காட நீதிமன்றம் அண்மையில் அனுமதி அளித்தது.