போக்குவரத்துத் துறை (ஆர்டிடி) அளித்த விளக்கத்தில் திருப்தியுறாத சிலாங்கூர் அரசு, அம்மாநிலத்தில் ஏஇஎஸ் அமலாக்கப்படுவதற்கு அனுமதி வழங்காது என்று மந்திரி புசார் காலிட் இப்ராகிம் கூறியுள்ளார்.
நேற்று போக்குவரத்துத் துறையின் விளக்கத்தைக் கேட்டபின்னர் மாநில அரசு அம்முடிவுக்கு வந்ததாக காலிட்(இடம்) கூறினார்.
“நேற்று ஆர்டிடி தலைமை இயக்குனர் சோலா மாட் ஹசான், சிலாங்கூர் பொருளாதார நடவடிக்கை மன்றத்தில் அளித்த விளக்கத்தைக் கேட்டபின்னர் ஏஇஎஸ் முறையை நடைமுறைப்படுத்துவதற்குமுன் அது தொடர்பான எல்லா விசயங்களை ஆர்டிடி கவனத்தில் கொண்டதா என்பதைத் தெரிந்துகொள்ள ஒரு சுயேச்சை நிறுவனத்தின்வழி ஆராய்வது அவசியம் என மாநில அரசு பரிந்துரைத்துள்ளது”, என்று காலிட் ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.
“எனவே, எஇஎஸ் அமலாக்கத்தில் சட்டம் சரியாக பின்பற்றப்படவில்லை என்பதால் அதைச் சரிசெய்யும்வரையில் அதை அமலாக்க இயலாது என்பதை அமைச்சிடம் தெரிவிக்குமாறு ஊராட்சி மன்றங்களுக்குப் பணிக்கப்பட்டிருக்கிறது”, என்றாரவர்.
கூட்டரசு அரசாங்கமும் குத்தகை நிறுவனமும் செய்துகொண்டுள்ள ஒப்பந்தம் குத்தகை நிறுவனத்துக்கு 17விழுக்காடு ஆதாயம் வழங்குவது ஓர் அநியாயம் என்று குறிப்பிட்ட காலிட் அதை மறுபடியும் பரிசீலிக்க வேண்டும் என்றார்.
பணம் மக்களுக்கே செல்ல வேண்டும்
சம்மன்கள்வழி கிடைக்கும் பணம் மக்களுக்குத்தான் செல்ல வேண்டுமே அன்றி தனியார் நிறுவனத்துக்குச் செல்வது சரியல்ல.
எனவே, அதில் திரட்டப்படும் பணம் அரசாங்க பொறுப்பு நிதி ஒன்றில் சேர்க்கப்பட்டு அதைச் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுத் திட்டங்களை மேற்கொள்ள பயன்படுத்திக்கொள்ளலாம் என்று காலிட் பரிந்துரைத்தார்.
“இதன்வழி சம்மன்களுக்கு மக்கள் கட்டும் பணம், சில தொழில் அதிபர்களை மேலும் பணக்காரர்களாக்க உதவாமல் நாட்டுக்கு உதவும்.
“சம்மன்கள் வழங்குவதைத் தனியார்மயப்படுத்தப்படுவதை வைத்து குத்தகை நிறுவனம் கொள்ளை ஆதாயம் பெறுவதற்கு சிலாங்கூர் அரசு இடமளிக்காது. இதனால், மக்களின் சுமைதான் அதிகரிக்கும்”, என்று காலிட் குறிப்பிட்டார்.