பத்து மலையில் சர்ச்சைக்குரிய டோலோமைட் பார்க் அவினியூ ஆடம்பர அடுக்கு மாடி வீட்டுத் திட்டத்தை வெளியுறவுத் துணை அமைச்சர் ஏ கோகிலன் பிள்ளை அங்கீகரித்தார் என்பதைக் காட்டும் செலாயாங் நகராட்சி மன்ற கூட்டக் குறிப்புக்கள் காட்டிய பின்னர் அது குறித்து கருத்துரைக்க கோகிலன் மறுத்து விட்டார்.
அந்தத் திட்டம் மீதான எல்லாக் கூட்டங்களையும் ஆய்வு செய்வதற்குத் தமக்கு கால அவகாசம் தேவைப்படுவதாகவும் அதற்குப் பின்னர் அறிக்கை வெளியிடுவதாகவும் அவர் சொன்னார்.
அவர் 1997ம் ஆண்டு தொடக்கம் 2008ம் ஆண்டு வரை கோகிலன் செலாயாங் நகராட்சி மன்ற உறுப்பினராக இருந்தார்.
“கூட்டக் குறிப்புக்களை சோதனை செய்ய என்னை அனுமதியுங்கள். நான் எல்லா கூட்டக் குறிப்புக்களையும் ஆராய வேண்டிய அவசியம் உள்ளது,” என இன்று காலை தொடர்பு கொள்ளப்பட்ட போது அவர் தெரிவித்தார்.
தி சன் நாளேடு கடந்த செவ்வாய்க்கிழமையும் புதன் கிழமையும் 2007-ம் ஆண்டு நவம்பர் 29-ம் தேதி நடைபெற்ற செலாயாங் நகராட்சி மன்ற முழு வாரியக் கூட்டத்தின் குறிப்புக்களை வெளியிட்டது. கோகிலனும் மஇகா-வைச் சேர்ந்த மூவர் உட்பட 19 மற்ற உறுப்பினர்களும் அந்தத் திட்டத்தை ஏற்றுக் கொண்டதை அவை காட்டின.
பத்து மலையில் சுண்ணாம்புக்கல் மலைகளுக்குப் பின்னால் புகழ் பெற்ற ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயம் அமைந்துள்ள இடத்துக்கு அருகில் 29 மாடி ஆடம்பர அடுக்கு மாடி வீட்டுத் திட்டம் அங்கீகரிக்கப்பட்டதால் அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது.
அந்தத் திட்டத்துக்கு எதிராக அக்டோபர் 26ம் தேதி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெருமக்களில் கோகிலனும் ஒருவர் ஆவார். அந்த ஆடம்பர அடுக்கு மாடித் திட்டத்தை சிலாங்கூர் பக்காத்தான் அரசாங்கம் அங்கீகரித்ததாக அப்போது பழி சுமத்தப்பட்டது.