முஸ்லிம் அல்லாதாருக்கு ஹுடுட் இல்லை என ஹாடி வாக்குறுதி

பாஸ் கட்சி, முஸ்லிம் அல்லாதவர்கள் மீது ஹுடுட் சட்டத்தை திணிக்காது என அந்தக் கட்சியின் 60வது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஹுடுட் சர்ச்சையை கிளறி விடுவது அம்னோவே என்றும் அது பழி சுமத்தியது.

அம்னோவும் அது ‘பணம் கொடுக்கும்’ ஊடகங்களும் அதனைப் பெரிய சர்ச்சையாக மாற்றி விட்டதாக பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறினார்.

சமூகம் சீரழிந்து வருகிறது, குற்றச் செயல்கள் விகிதம் அதிகரித்து வருகிறது. அதனால் ஷாரியா சட்ட அமலாக்கத்தை அனைத்து முஸ்லிம்களும் ஆதரிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

“ஷாரியா சட்டம் பற்றி பேசப்படும் போது ஹுடுட் மீதான பகுதி மட்டுமே விவாதிக்கப்படுகிறது. பெரிதுபடுத்தப்படுகிறது,” என அவர் கெப்பாளா பத்தாஸில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட  நிகழ்வில் கூறினார்.

“முஸ்லிம் அல்லாதாரிடையே அச்சத்தை ஏற்படுத்தவும் முஸ்லிம்களை முட்டாள்களாகக் காட்டவும் ஹுடுட் மீதான் பகுதி வேண்டுமென்றே பெரிதுபடுத்தப்படுகிறது,” என்றார் ஹாடி.

இஸ்லாமிய நீதி முறை நியாயமானது என்றும் மாராங் சட்டமன்ற உறுப்பினருமான அவர் உறுதி அளித்தார்.

குற்றம் சாட்டப்பட்டவரை ‘விடுவிப்பது’ குறித்தே உண்மையான ஷாரியா நீதிமன்ற நீதிபதி கவனம் செலுத்துவார் என்றும் இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கு இணங்க அவர் அதனைச் செய்ய முயலுவார் என்றும் ஹாடி தெரிவித்தார்.

அந்தச் சட்டம் அல்லாஹ்-வின் சட்டமாகும் என்றார் அவர்.

முஸ்லிம், முஸ்லிம் அல்லாதார் தடை அகன்றுள்ளது

அவர்கள் ஹுடுட் பற்றி சொல்லும் போது அது பாஸ் ஹுடுட் என்கின்றனர். ஹுடுட்-டின் உண்மையான நிலையை அவர்கள் மறைக்கின்றனர்,” என பாஸ் தலைவர் வருத்தத்துடன் கூறினார்.

முஸ்லிம் அல்லாதவருடன் பாஸ் உறவுகள் தொடருவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவர், அது இரண்டு தரப்புக்கும் இடையில் நிலவிய தடையை தகர்ப்பதில் வெற்றி கண்டுள்ளதாகச்  சொன்னார்.

கட்சி மிகவும் நல்ல முறையில் செயல்பட்டுள்ளதால் முஸ்லிம் அல்லாதாரும் கூட பாஸ் கட்சியில் சேருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

முஸ்லிம் அல்லாத அரசியல் கட்சிகளும் அரசு சாரா அமைப்புக்களும் கூட கட்சியுடன் இப்போது இணைந்து செயல்படத் தயாராக இருக்கின்றன என்றார் அவர்.

“ஆனால் துரதிர்ஷ்டவசமாக பாஸ் ஏன் முஸ்லிம் அல்லாதாருடன் ஒத்துழைக்கிறது என சில தரப்புக்கள் கேட்கின்றன. அது இஸ்லாம் எங்களுக்குக் கற்றுக் கொடுத்தது ஆகும்.”

“அதனால் தான் நாங்கள் முஸ்லிம் அல்லாத அம்பிகா ஸ்ரீனிவாசனைத் தலைவராகக் கொண்ட பெர்சே 2.0 அமைப்புடன் இணைந்து கொண்டோம்.”

பாஸ் அனைவரையும் அம்னோ ‘கை விட்டவர்களையும்’ கூட ஏற்றுக் கொள்வதாக ஹாடி குறிப்பிட்டார்.  அது கட்சி கடைப்பிடிக்கும் திறந்த கொள்கையாகும். அதனால் மற்ற எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து அது பக்காத்தான் ராக்யாட்டை தோற்றுவித்துள்ளது  என அவர் மேலும் சொன்னார்.

“நாங்கள் எங்கள் வேறுபாடுகளை ஏற்றுக் கொண்டுள்ளோம். பிஎன் பணம் கொடுக்கும் ஊடகங்கள் எங்களை இன்னும் பிளவுபடுத்த முயலுகின்றன. ஆனால் இன்று வரை அவை தோல்வியையே தழுவி வந்துள்ளன.”

TAGS: