ஹுடுட்: நாடாளுமன்ற பெரும்பான்மை கிடைக்க வேண்டும்; நிக் அஜிஸ்

இந்த நாட்டில் ஹுடுட் சட்டத்தை அமலாக்கும் பொருட்டு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைப்பதற்கு இறைவன் கருணை புரிய வேண்டும் என பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அஜிஸ் நிக் மாட் வேண்டிக் கொண்டுள்ளார்.

தொழுவது, நோன்பு இருப்பது, ஹாஜ் பயணம் மேற்கொள்வது போன்ற இஸ்லாத்தின் மற்ற முக்கியமான கடமைகளைப் போன்று ஹுடுட்டும் கட்டாயமான அவசியமான அம்சமாகும் என கிளந்தான் மந்திரி புசாருமான அவர் இன்று கூறினார்.

ஹுடுட் சட்டத்தைக் கடுமையாக எதிர்த்து வந்த டிஏபி கூட அண்மையில் சிலாங்கூரில் பக்காத்தான் தலைவர்கள் கூடிப் பேசிய பின்னர் கிளந்தானில் ஹுடுட் சட்டத்தை இயற்றுவதற்கு அந்த மாநில அரசாங்கம் தெரிவித்த யோசனையை ஏற்றுக் கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.

இரண்டு அம்னோ உறுப்பினர்கள் உட்பட கிளந்தான் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும்  ஷாரியா கிரிமினல் சட்டத்தை அங்கீகரித்துள்ளதையும் அந்த பக்காதான் தோழமைக் கட்சி ஒப்புக் கொண்டுள்ளதாகவும் நிக் அஜிஸ் குறிப்பிட்டார்.

“அந்தச் சட்டம் முஸ்லிம்களுக்காக ஷாரியா நீதிமன்றத்தில் அமலாக்கப்படும். அது சிவில் நீதிமன்றத்தில் அல்ல.”

நிக் அஜிஸ், பினாங்கு கெப்பாளா பத்தாஸில் நடைபெறும் பாஸ் கட்சியின் 60வது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களுக்கு இடையில் நிருபர்களிடம் பேசினார்.

‘மலேசியாவில் நாம் மரண தண்டனையை ஏற்றுக் கொண்டுள்ளோம். ஆனால் மரண தண்டனையை வழங்காத ஹுடுட் சட்டத்தை நாம் ஏற்கவில்லை என்பது வினோதமாக இருக்கிறது.”

இந்த நாட்டில் ஹுடுட் சட்டத்தை பாஸ் அமலாக்குவதை டிஏபி தடுப்பதாக அம்னோ குற்றம் சாட்டுவதாக அவரிடம் தெரிவிக்கப்பட்ட போது, அந்தக் கேள்வி டிஏபி-யிடம் கேட்கப்பட வேண்டும் என்றார் நிக் அஜிஸ்.

“அம்னோ அதற்காக டிஏபி மீது பழி போட விரும்பினால் அது அதனுடைய விருப்பம்,” என அவர் புன்னகையுடன் சொன்னார்.

TAGS: