பாரிசான் மீண்டும் சிலாங்கூர் மாநில ஆட்சியைக் கைப்பற்றினால், சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் பத்துமலை 29 மாடி கொண்டோ திட்டத்தை குப்பையில் எறியும் என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று உறுதியளித்தார்.
அதோடு மட்டுமல்ல. பத்துமலை யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய தளம் என்ற தகுதி பெறுவதற்கு உலக பாரம்பரிய ஆணையத்தில் மலேசியாவின் அங்கத்துவம் 2015 இல் முடிவுற்றவுடன் மலேசிய அமைச்சரவை மனு செய்யும் என்றும் கூறினார்.
அது மட்டுமல்ல. அடுத்த ஆண்டிலிருந்து லாபுவான் கூட்டரசு பிரதேசத்தில் தீபாவளி பொது விடுமுறை நாளாக இருக்கும் என்றும் அவர் அறிவித்தார்.
“மலேசிய மற்றும் வெளிநாட்டு இந்துக்கள் பத்துமலைக்கு உயரிய மதிப்பளித்து போற்றுகின்றனர்.
“ஆகவே, பத்துமலை வளாகம் பேணப்பட வேண்டும் என்பதோடு பத்துமலை இந்துக்களுக்கான ஒரு புனித தலம் என்ற அதன் தகுதிக்கு எதிரான எந்த மருட்டலிலிருந்தும் அது தற்காக்கப்பட வேண்டும்.
“இந்த தீபாவளி நாளில் பத்துமலையில் குழுமியிருக்கும் ஆயிரக்கணக்கான இந்துக்களிடம் பாரிசான் அரசாங்கம் இந்த வளாகத்தைத் தற்காக்கும் என்று கூற விரும்புகிறேன்”, என்று சிலாங்கூர் பிஎன் தலைவருமான நஜிப் கூறினார்.
பத்துமலையில் மஇகா ஏற்பாட்டில் நடந்த திறந்தவெளி தீபாவளி உபசரிப்பில் கலந்து கொண்ட சுமார் 5,000 பேரிடம் நஜிப் பேசினார்.
இந்த பத்துமலை “கொண்டோ” திட்டத்திற்கு முந்தைய பாரிசான் அரசாங்கம் ஒப்புதல் வழங்கியிருந்தது. அத்திட்டம் மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என்பதால் அதற்கான ஒப்புதலை தற்போதைய பக்கத்தான் அரசாங்கம் நிறுத்தி வைத்துள்ளது.