கொண்டோ சர்ச்சை: செலாயாங் நகராட்சி மன்றத் தலைவர் இடம் மாற்றப்பட்டார்

செலாயாங் நகராட்சி மன்றத் தலைவர் ஜைனல் அபிடின் ஆலாலா-வை 24 மணி நேர முன்னறிவுப்புடன் புத்ராஜெயா இடம் மாற்றம் செய்துள்ளது.

மாநில அரசாங்கத்துக்கு விரக்தியை ஏற்படுத்துவதே அந்த நடவடிக்கையின் நோக்கம் எனக் கருதப்படுகின்றது.

பத்துமலை கோவில் வளாகத்துக்கு அருகில் 29 மாடி ஆடம்பர அடுக்குமாடி வீட்டு (கொண்டோ) திட்டத்தை பக்காத்தான் ராக்யாட் அங்கீகரிக்கவில்லை என்பதை ஜைனல் அக்டோபர் 30ம் தேதி நடத்திய நிருபர்கள் சந்திப்பில் தெளிவுபடுத்தியதற்கு அவருடைய திடீர் இட மாற்றத்துக்கு தொடர்பு இருக்கலாம் என சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர் ரோனி லியூ கூறினார்.

“முக்கியமான விஷயங்களை சமாளிக்கக் கூடிய ஆற்றலைப் பெற்ற நகராட்சி மன்றத் தலைவர் ஒருவரை இழப்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது. அவர் திடீரென மாற்றப்பட்டுள்ளார். நீங்கள் என் மீது பழி போடக் கூடாது. அது வழக்கமானது அல்ல என நான் கருதுகிறேன்…”

“ஊராட்சி மன்றங்களுக்குப் பொறுப்பான ஆட்சி மன்ற உறுப்பினர் என்ற முறையில் நான் அந்த இட மாற்றம் குறித்து அதிருப்தி அடைந்துள்ளேன்,” என அவர் ஷா அலாமில் நிருபர்களிடம் சொன்னார்.

அந்த இட மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை செலாயாங் நகராட்சி மன்றம் உறுதிப்படுத்தியது. அவர் இன்று இந்தான் எனப்படும் தேசிய பொது நிர்வாகப் பயிற்சிக் கழகத்தில் பணியில் சேர வேண்டும்.

“அரசதந்திர நிர்வாகப் பிரிவைச் சார்ந்த அதிகாரிகளுக்கு இட மாற்றம் வழக்கமானது,” என தம்மை முகமட் ஜின் என அடையாளம் கூறிக் கொண்ட நிறுவனத் தொடர்பு அதிகாரி ஒருவர் தொடர்பு கொள்ளப்பட்ட போது கூறினார்.

ஜைனலுடன் தொடர்பு கொள்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.

கடந்த ஆறு வாரங்களில் சிலாங்கூரில் ஊராட்சி மன்றத் தலைவர் ஒருவர் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளது இது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றத் தலைவர் ரோஸ்லான் ஸாக்கிமான் அக்டோபர் முதல் தேதி திடீரென இட மாற்றம் செய்யப்பட்டார்.