மலேசியாவின் நீண்டகால பொருளாதார வியூகத்துக்கு ஐஎம்எப் பாராட்டு

பன்னாட்டுப் பண நிறுவன (ஐஎம்எப்) நிர்வாக இயக்குனர் கிறிஸ்டின் லகார்ட், மலேசியாவை உயர்-வருமானம் பெறும் நாடாக்கும் நீண்டகால பொருளாதார வியூகங்களைப் பாராட்டியுள்ளார்.

“பொருளாதாரத்தைத் திறம்படவும் நடைமுறைக்கு உகந்த வகையிலும் நிர்வகித்து வரும் பிரதமர் நஜிப்(அப்துல் ரசாக்)பையும் அவர்தம் சகாக்களையும் பாராட்டுகிறேன்”, என்று மலேசிய தலைநகருக்கு மேற்கொண்ட வருகையின் முடிவில் வெளியிட்ட அறிக்கையில் லகார்ட் குறிப்பிட்டிருந்தார். 

“அரசாங்கத்தின் பொருளாதார உருமாற்றத் திட்டங்களை உள்ளடக்கிய  நீண்ட கால பொருளாதார வியூகங்களும் 2020-க்குள் மலேசியாவை ஒரு முன்னேறிய நாடு என்ற நிலைக்கு உயர்த்தும் அதன் தொலைநோக்குத் திட்டமும் என்னைக் கவர்ந்தன”, என்றாரவர்.  

மலேசியா அதன் இலக்கான 4-5விழுக்காடு வளர்ச்சியை இவ்வாண்டில் அடையும் என்று நம்பிக்கை கொள்வதாகவும் அவர் சொன்னார்.

லாகார்ட் தம் வருகையின்போது நஜிப், மத்திய பொருளகத் தலைவர் ஸெட்டி அஹ்டார் அசீஸ்(இடம்) ஆகியோரையும் பொருளாதார உயர் அதிகாரிகளையும் சந்தித்தார்.

புதன்கிழமை மலேசிய வணிகர்களையும் பொருளாதார நிபுணர்களையும் சந்தித்த அவர், உலகப் பொருளாதாரக் குழப்பத்திலிருந்து மீட்சிபெற தென்கிழக்காசிய நாடுகள் அணுக்கமான பொருளாதார ஒத்துழைப்பை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

“2015-இல் ஆசியான் பொருளாதார சமூகம் அமைக்கப்படுவதன்வழி ஒரு பொதுச் சந்தை உருவாக்கப்பட்டு பெரும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும்”, என்றாரவர்.

– dpa

TAGS: