மலேசியப் போலீசார், ஆடவர் ஒருவர் தம்மிடம் வேலை செய்த இந்தோனிசிய வீட்டுப் பணிப் பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் சம்பவத்தை விசாரித்து வருகின்றனர்.
ஏற்கனவே இந்தோனிசிய வீட்டுப் பணிப் பெண் ஒருவர் மூன்று போலீஸ்காரர்கள் தம்மை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
அந்த சம்பவங்கள் இந்தோனிசியாவில் ஆத்திரத்தை மூட்டி விட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய காலமாக இந்தோனிசிய வீட்டுப் பணிப் பெண்கள் துன்பறுத்தப்பட்ட சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதைத் தொடர்ந்து மலேசியாவுக்கும் இந்தோனிசியாவுக்கும் இடையில் உறவுகள் பதற்றமாக இருக்கின்றன. 2009ம் ஆண்டு மலேசியாவுக்கு பணிப் பெண்களை அனுப்புவதை இந்தோனிசியா தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.
சிரம்பானில் நிகழ்ந்த அண்மைய சம்பவத்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதோடு கட்டிப் போடப்பட்டு நான்கு நாட்களுக்கு உணவும் கொடுக்கப்படவில்லை என மலேசிய வெளியுறவு அமைச்சு விடுத்த அறிக்கை தெரிவித்தது.
இந்த வாரத் தொடக்கத்தில் கைது செய்யப்பட்ட முதலாளியை பாலியல் வல்லுறவு தொடர்பில் போலீசார் விசாரித்து வருகின்றனர். அந்தக் குற்றச்சாட்டுக்கு 20 ஆண்டுகள் வரையில் தண்டனை விதிக்கப்படலாம்.
“அந்த வெட்கக்கேடான, மனிதநேயமற்ற செயலை அரசாங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது,” என அமைச்சு கூறியது.
15 வயதான அந்த இந்தோனிசியப் பெண், நாட்டுக்குள் சட்ட விரோதமாக நுழைந்துள்ளார் என்றும் கடந்த மூன்று மாதங்களாக அந்தக் குடும்பத்தில் வேலை செய்தார் என்றும் சிரம்பான் போலீஸ் தலைவர் சைபுல் அஸ்லி ஏஎப்பி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
கடந்த வாரம் பினாங்கு மாநிலத்தில் ஆவணங்களைச் சோதிப்பதற்காக இந்தோனிசிய மாது ஒருவரை தடுத்து நிறுத்திய மூன்று போலீஸ்காரர்கள் அவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட பின்னர் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
வீட்டுப் பணிப் பெண்களை மலேசியாவுக்கு வேலை அனுப்பும் நாடுகளில் இந்தோனிசியா முதலிடம் வகிக்கிறது.
2009ல் பல துன்புறுத்தல் சம்பவங்களுக்குப் பின்னர் அது மலேசியாவுக்கு வீட்டுப் பணிப் பெண்களை அனுப்புவதை நிறுத்தியது.
அவர்களுக்கு வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை வழங்குவது உட்பட பாதுகாப்பு வழங்க இரண்டு நாடுகளும் ஒப்புக் கொண்ட பின்னர் கடந்த டிசம்பர் மாதம் அந்தத் தடையை ஜகார்த்தை அகற்றியது.
ஆனால் அதற்குப் பின்னர் வீட்டுப் பணிப் பெண்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே வந்தனர். தடை அமலாக்கப்படுவதற்கு முன்னர் மலேசியாவில் 300,000க்கும் மேற்பட்ட இந்தோனிசியப் பெண்கள் மலேசியக் குடும்பங்களில் வேலை செய்து வந்தனர்.
பல புகார்களைத் தொடர்ந்து கம்போடியாவும் மலேசியாவுக்கு பணிப் பெண்களை அனுப்புவதை நிறுத்திக் கொண்டுள்ளது.
ஏஎப்பி