ஓர் ஊராட்சிமன்ற தலைவரை மாற்றும் அதிகாரம் பொதுச்சேவை இலாகாவுக்கு (பிஎஸ்டி) இல்லை என்று செலயாங் முனிசிபல் கவுன்சில் கூறுகிறது.
அந்த இலாகா நேற்று செலயாங் முனிசிபல் கவுன்சில் தலைவர் ஸைனால் அபிடின் அலலாவை இந்தான் என்று அழைக்கப்படும் தேசிய பொதுநிர்வாக கழகத்திற்கு மாற்றியது ஊராட்சி சட்டம் 1976 ஐ மீறிய செயலாகும் என்று ஆட்சிக்குழு உறுப்பினர் எரிக் டான் போக் சியோங் கூறினார்.
“பிஎஸ்டி எந்த ஒரு சட்டத்தின்கீழும் உருவாக்கப்பட்ட அமைப்பல்ல. அது அரசாங்கத்திற்கு உதவும் ஓர் ஏஜென்சிதான்.
“ஆகவே, அதற்கு என்ன அதிகாரம் இருக்கிறது”, என்று மெனாரா எம்பிஎஸ்சில் நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
சிலர் இதற்கும் பத்துமலை கொண்டோவுக்கும் தொடர்பு உள்ளது என்று சந்தேகிக்கும் சம்பவத்தில், பதவியிலிருந்து ஸைனால் 24 மணி நேர அறிவிப்பின்கீழ் மாற்றப்பட்டார்.
மாற்றம் தொழிலியல் முறைக்கு முரணானது
ஸைனால் மாற்றம் செய்யப்பட்டது அரசமைப்புச் சட்டம் விதி 132(2) க்கு முரணானது ஏனென்றால் அச்சட்டம் மாநில அதிகாரியின் நியமனத்தை மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்படுத்துகிறது என்று டான் மேலும் கூறினார்.
இன்னொரு செலயாங் முனிசிபல் கவுன்சில் உறுப்பினரான எ ரஹிம் அஹமட் காஸ்டி இந்த மாற்றம் ஸைனாலின் பணி முன்னேற்றத்தை முடக்குவதற்கான ஒரு வகை “தண்டனை” என்றார்.