கைரி கட்சிப் பதவியைத் தற்காக்கப் போட்டியிடுவார் ஆனால் தேர்தலில் போட்டியிடுவது நிச்சமில்லை

அம்னோ இளைஞர் பகுதித் தலைவர் கைரி ஜமாலுடின் அபு பக்கார், கட்சிப் பதவியைத் தற்காக்க போட்டியிடுவார் ஆனால் பொதுத் தேர்தலில் களமிறங்குவதில் அவருக்கு அவ்வளவு விருப்பம் இல்லை.

தம் விருப்பத்தை கைரி அல்லது கேஜே என்று சுருக்கமாக அழைக்கப்படும் அவர், பிரதமரும் அம்னோ தலைவருமான நஜிப் அப்துல் ரசாக்கிடம் தெரியப்படுத்தியிருப்பதாக த ஸ்டார் நாளேடு அறிவித்துள்ளது.

“என் விருப்பத்தைத் தெரிவித்து விட்டேன். பிரதமர் (நாடாளுமன்றத்துக்கு) போட்டியிடச் சொன்னால் போட்டியிடுவேன். அதே வேளை (என்னைத்) தேர்ந்தெடுக்காவிட்டால் அதையும் ஏற்றுக்கொள்வேன்”, என்று கைரி சொன்னார்.

இதற்குமுன் கடந்த ஆண்டு டிவிட்டரில் பதிவிட்டிருந்த கைரி 2008-இல் தாம் வென்ற ரெம்பாவ் தொகுதியில் மீண்டும் போட்டியிடப்போவதில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

கைரி, 36, அனைத்துலக வாணிக, தொழில் துணை அமைச்சர் முக்ரிஸ் மகாதிரையும் முன்னாள் சிலாங்கூர் மந்திரி புசார் டாக்டர் முகம்மட் கீர் ஜோகாரியையும் தோற்கடித்து அம்னோ இளைஞர் தலைவரானார்.

இப்போது அவர் பெர்பாடானான் யுஸாகாவான் நேசனல் பெர்ஹாட்-இன் தலைவராக இருக்கிறார். ஆனால், அமைச்சரவையில் பதவி எதுவும்  வகிக்கவில்லை.